நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு அடுத்த மாதம் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

நடிகர் விஜய் சினிமாவில் செம்ம பிசியான நடிகராக வலம் வருகிறார். அவர் கைவசம் தற்போது கோட் மற்றும் தளபதி 69 ஆகிய திரைப்படங்கள் உள்ளன. இதில் கோட் திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

கோட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 69 திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஆக்ஸ்ட் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இது அரசியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.250 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம்.

இப்படி சினிமாவில் டாப் கியரில் சென்று கொண்டிருக்கும் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். அதற்கான உறுப்பினர் சேர்க்கையும் ஆன்லைனில் படு ஜோராக நடைபெற்று வருகிறது. தளபதி 69 படத்துடன் சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ள விஜய், முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் விஜய் கட்சி குறித்த புது அப்டேட் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அக்கட்சியின் முதல் மாநாட்டை வருகிற ஜூன் 22-ந் தேதி தன்னுடைய பிறந்தநாளன்று மதுரையில் பிரம்மாண்டமாக நடத்த உள்ளாராம் நடிகர் விஜய். அரசியல் களத்தை அதிர வைக்கும் மாநாடாக அது இருக்கும் என கூறப்படுகிறது. அந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சைக் கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here