முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார். அப்போது நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து நெல்லைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய 4.3 GW சூரிய மின்கலம் மற்றும் தொகுதி உற்பத்தி தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளது. சுமார் 4,400 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இதன் மூலம் 2,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான TP சோலார் நிறுவனம் அமைத்துள்ள 4.3 GW Solar Cell மற்றும் Module உற்பத்தி ஆலை துவங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிபி சோலார் உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சிப்காட்டில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் தமிழக தொழில்துறை அமைச்சர் மற்றும் டாடா குழும நிர்வாக இயக்குனர்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here