ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெயில் தாக்கம் காரணமாக ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2026–2027-ஆம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அந்த கோரிக்கைகளையும், தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளையும் கருத்தில் கொண்டு, அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தலின்படி, பள்ளிக் கல்வித் துறை தற்போது புதிய முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும், 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வருகின்ற ஜூன் 4 அன்று ஒரேநாளில் பள்ளிகள் திறக்கப்படும்.
பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக, கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிகளில் சுகாதார வசதிகள், குடிநீர் வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

