தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் SIR எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் தொடர்பான விவாதங்களும், போராட்டங்களும் தீவிரம் அடைந்துள்ளன. இதற்கு மத்தியில், SSR என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தகுதியுள்ள புதிய மற்றும் இளம் வாக்காளர்களைச் சேர்ப்பது, வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை நீக்குவது உள்ளிட்ட பணிகளின் மூலம் பட்டியலின் துல்லியத்தன்மையை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதாவது, இந்த அடுத்த மாதம் 12ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அன்று முதல் டிசம்பர் 11ஆம் தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்களுக்கு வாக்காளர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். டிசம்பர் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபனைகள் மீது தேர்தல் ஆணையம் முடிவெடுத்து, அடுத்தாண்டு ஜனவரி 4ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடவுள்ளது.

