சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) மூத்த தலைவரும், கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (அக்டோபர் 31, 2025) அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக அதிமுகவின் உட்கட்சி அரசியலில், அடுத்தகட்ட சலசலப்புகளையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. செங்கோட்டையன் மீதான இந்த நடவடிக்கை எதிர்பாராதது அல்ல என்றாலும், அதன் உடனடி காரணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்கள் மற்றும் பிளவுகள் தமிழக அரசியலில் நீண்டகாலமாக பேசுபொருளாக உள்ளன. சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். எனினும், கட்சியை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற குரல்கள் உள்ளுக்குள்ளேயே அவ்வப்போது ஒலித்து வந்தன. இந்த குரல்களில் மிக முக்கியமானதாக ஒலித்தது செங்கோட்டையன் அவர்களின் குரல்தான்.
பிளவுப்பட்ட தலைவர்களை ஒன்றிணைக்கக் கோரிய செங்கோட்டையன்
கடந்த சில மாதங்களாகவே, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கருத்தை செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற, உடைந்தவர்களை ஒன்றுசேர்ப்பது அவசியம் என்று அவர் வெளிப்படையாகக் கூறியது, கட்சித் தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, கடந்த செப்டம்பர் மாதம், பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க 10 நாட்கள் கெடு விதிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்த போர்க்கொடியின் எதிரொலியாக, செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பொறுப்புகளில் இருந்து அவர் உடனடியாக நீக்கப்பட்டார்.
ஆனால், கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டபோதும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் நீடித்து வந்த செங்கோட்டையன், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவே தெரிவித்தார். பொறுப்புகள் பறிக்கப்பட்டது ஜனநாயக முறைப்படி அல்ல என்றும், தன்னிடம் விளக்கம் கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் அப்போது கருத்து தெரிவித்திருந்தார். இத்தனை பரபரப்புகளுக்கு மத்தியில்தான், சமீபத்திய நிகழ்வுகள் அவரது முழுமையான நீக்கத்திற்கு காரணமாக அமைந்தன.
பசும்பொன் சந்திப்பு: நீக்கத்திற்கான நேரடி காரணம்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்படுவதற்கான நேரடி காரணம், அவர் கடந்த அக்டோபர் 30 அன்று (வியாழக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடந்த முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் நடந்த சந்திப்புகள்தான்.
அன்று மதுரைக்கு வந்த செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார். இருவரும் அங்கிருந்து ஒரே காரில் பசும்பொன்னுக்கு சென்றனர். வழியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனையும் சந்தித்த மூவரும், தேவர் நினைவிடத்தில் ஒன்றாக இணைந்து மரியாதை செலுத்தினர். இந்த மூவரின் கூட்டுச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளானது. இதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வமும், செங்கோட்டையன் அவர்களும் அங்கு வந்திருந்த சசிகலாவையும் சந்தித்துப் பேசினர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் கட்சி நிர்வாகிகள் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்த நிலையில், செங்கோட்டையன் இந்த விதிமுறையை வெளிப்படையாக மீறியது கட்சித் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சந்திப்புகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும், தலைமையின் கருத்தை முழுமையாகக் கடைபிடிக்காவிட்டால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் நீக்க அறிவிப்பு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும் அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ. செங்கோட்டையன், எம்.எல்.ஏ., இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் பதில்
நீக்கத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “கட்சியை விட்டு நீக்கியது குறித்து இன்று (நவம்பர் 1) இன்று காலை 11 மணிக்கு செய்தியாளர் சந்திப்பின்போது விளக்கமாகப் பேசுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

