தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அரசின் சார்பில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ் .எஸ்.ஆர். இராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது,
” மோன்தா புயல் ஆந்திராவை நோக்கி சென்றாலும்,சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை பாதிப்புகள் இருக்கும் என்பதால் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் விரைவாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னையில் உள்ள ஏரிகளின் நீர் இருப்பு நிலவரங்களை பொறுத்தவரை,
பூண்டி ஏரியில் 83.53 %, சோழவரத்தில் 60.05 %, செங்குன்றத்தில் 81.85 % செம்பரம்பாக்கத்தில் 80.36 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து ஏரிகளில் நீரின் அளவை கண்காணிக்க உள்ளோம். ஏரிகளில் உபரி நீரை திறக்கும் போது கரையோரங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தி, மழை அதிகம் எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க முடிவு செய்துள்ளோம்.
இந்த புயலால் பெரிய பாதிப்புகள் இருக்காது, ஆனால் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை அதிகம் இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்றார். வடகிழக்கு பருவமழையை சாமர்த்தியமாக முதலமைச்சர் கையாள்வார்” என தெரிவித்துள்ளார்.

