தமிழகத்தில் ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை , விசிக ,கம்யூனிஸ்ட் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் போன்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நான்காவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரில் ஆணவப்படுகொலைகள் குறித்து பேசிய முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின்,
ஆணவப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் !
அவ்வப்போது ஏதேனும் ஒரு பகுதியில் நடந்துவிடும் ஒரு துயரமான சம்பவம் நம் நெஞ்சை உலுக்கிவிடுகிறது. நம் சமுதாயத்தை தலைகுனிய செய்துவிடுகிறது. பெண்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்கும் உரிமையை பறிக்கும் ஆணாதிக்கமும் இந்த குற்ற செயல்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இந்த வேதனையை தான் நேற்றைக்கு உறுப்பினர்கள் பலரும் வெளிப்படுத்தி காட்டியிருக்கிறீர்கள்.
ஆணவப் படுகொலையை தடுக்க வேண்டும், எப்படியாவது தடுக்க வேண்டும் கோரிக்கை வைத்தீர்கள். சமீபத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில், திராவிடர் கழக தலைவர் வீரமணி அவர்களும் தீர்மானம் நிறைவேற்றி என்னிடத்தில் கொடுத்திருக்கிறார்கள். ஆணவப்படுகொலைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தி அதன் மூலம் இந்த அநீதியை தடுக்க வேண்டும் என்பது நாம் அனைவரின் ஆதங்கமாக இருக்கிறது.
ஆணவப் படுகொலைக்கு எதிராக விழிப்புணர்வு பரப்புரை!
ஆணவப் படுகொலை நடக்கும்போது அது தொடர்பான அனைத்து வழக்குகளிலும் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த படுகொலைக்கு சாதி மட்டுமே காரணம் அல்ல. இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன. எதன் பொருட்டு நடந்தாலும் கொலை கொலை தான். அதற்கான தண்டனைகள் கடுமையாக தரப்பட்டு வருகின்றன. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குண்டர் தடுப்பு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள்.
யாரும், எவரும் எதன் பொருட்டும் குற்றத்தில் இருந்து தண்டனை இல்லாமல் தப்பிவிடக்கூடாது என்பதை காவல்துறைக்கு உத்தரவாக போட்டுள்ளோம். எனவே சட்டம் தன்னுடைய கடமையை செய்கிறது. அதே நேரத்தில் இந்த கொடூரமான சிந்தனைக்கு எதிராக விழிப்புணர்வு பரப்புரையை சமூக சீர்திருத்த இயக்கங்கள் மட்டுமல்ல அரசியல் இயக்கங்களும் பொதுநல அமைப்புகளும் செய்யவேண்டும் என்பதை என்னுடைய வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.
ஆதிக்க மனோபாவத்திற்கு எதிராக அனைவரும் பேச வேண்டும் !
நாகரீக சமூகத்தின் அடையாளம் என்பது பொருளாதார மேம்பாடு மட்டுமல்ல. சமூக சிந்தனையின் மேம்பாடு என்பதை உணர்த்துவதாக இப்பரப்புரைகள் இருக்க வேண்டும். சமுதாயத்தில் சாதி வேற்றுமைக்கு எதிராக, ஆதிக்க மனோபாவத்திற்கு எதிராக அனைவரும் பேச வேண்டும். மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு ஏதும் இல்லை. அனைவரும் சமம். பாலின சமத்துவமும் வளர்ச்சிபெற்ற ஒரு சமுதாயத்திற்கு அடையாளம் என்றார் பெரியார்.
அனைத்து விதமான ஆதிக்க மனோபாவத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆதிக்க எதிர்ப்பும் சமத்துவ சிந்தனையும் கொண்ட சுயமரியாதையையும் அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை ஒரு இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை.
ஆணவப்படுகொலைகளை தடுக்கும் சட்டம் இயற்ற நடவடிக்கை !
சீர்திருத்த பரப்புரையும், குற்றத்திற்கான தண்டனையும் வாளும் கேடையமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இது குறித்து தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு கே.என்.பாட்ஷா அவர்கள் தலைமையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்களை கொண்ட ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்பதை முக்கியமான அறிவிப்பாக இந்த மாமன்றத்தில் அறிவிக்கிறேன். இந்த ஆணையம் அரசியல் இயக்கங்கள், சட்ட வல்லுநர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் பெற்று உரிய பரிந்துரைகளை வழங்கும் அதன் அடிப்படியில் தமிழ்நாடு அரசு ஆணவப்படுகொலைகளை தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதியளிக்கிறேன் என்றார்.