தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை, சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் நேற்று சந்தித்தார். அப்போது சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு குறித்து இருவரும் கலந்துரையாடினர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்றார். தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த ஜூன் 18-ம் தேதி தொடங்கியது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 23-ம் தேதி வரை நடத்தப்பட்டு, பின்பு தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆக.5-ம் தேதி தொடங்கியது.
மாநிலத்தின் 2026-27 ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். ஆக.6-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். 7-ம் தேதி முதல் இரு பட்ஜெட்கள் மீதான விவாதம் நடைபெற்றது.
ஆக.12-ம் தேதி, இரு அமைச்சர்களின் பதிலுரையுடன் விவாதம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து துறைவாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் ஆக.17-ல் தொடங்கி, செப்.8-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில், பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் நேற்று மக்கள் மாளிகைக்கு சென்று ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்தார்.
அப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தது தொடர்பாக இருவரும் கலந்துரையாடினர். அப்போது, பேரவைத் தலைவரின் அவை நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை ஆளுநர் அர்லேகர் பெரிதும் பாராட்டினார்.

