திமுகவின் பவள விழா நிறைவையொட்டி அக்கட்சியின் இளைஞர் அணி சார்பில் , `காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல் வெளியீடு, `இருவண்ணக்கொடிக்கு வயது 75’ என்னும் இருநாள் கருத்தரங்கம், அரசியல் புத்தகங்கள் மட்டுமே இடம்பெறும் ‘முற்போக்கு புத்தகக் காட்சி’ ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை திமுக இளைஞர் அணி அறிவுத்திருவிழா’வாகக் கொண்டாடவிருக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,
” அறம்-பொருள்-இன்பம் எனத் தமிழர் வாழ்வியல் நெறியுரைத்த வள்ளுவத்திற்கு, குறளோவியம் கண்ட தலைவர் கலைஞர் எழுப்பிய ‘வள்ளுவர் கோட்ட’த்தில், கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற பேரறிஞர் அண்ணாவின் வழிநின்று செயல்படும் தமிழர்களின் தனிப்பெரும் தலைமை இயக்கமாம் திராவிட முன்னேற்ற கழகத்தின் #திமுக75_அறிவுத்திருவிழா!
நம் கழகத்தின் பவள விழா நிறைவையொட்டி, கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டலில்,
தமிழ்நாட்டின் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாட்டுத் தளங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்படுத்திய தாக்கங்கள், மாற்றங்கள் குறித்து, கழக இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பதிப்பகம் வெளியிடும் `காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல் வெளியீடு, `இருவண்ணக்கொடிக்கு வயது 75’ என்னும் இருநாள் கருத்தரங்கம், அரசியல் புத்தகங்கள் மட்டுமே இடம்பெறும் ‘முற்போக்கு புத்தகக் காட்சி’ ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை திமுக இளைஞர் அணி அறிவுத்திருவிழா’வாகக் கொண்டாடவிருக்கிறது.
நவம்பர் 8 அன்று கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் `காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டு, இருநாள் கருத்தரங்கத்தையும் முற்போக்குப் புத்தகக் காட்சியையும் தொடங்கிவைக்கிறார்.
நவம்பர் 8 மற்றும் 9-ல் நடைபெறும் இருநாள் கருத்தரங்கத்தில், கழக முன்னோடிகளும் தமிழின் முக்கியச் சிந்தனையாளர்களும் செயற்பாட்டாளர்களும் கருத்துரை வழங்குகின்றனர்.
நவம்பர் 8 முதல் 16 -ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகக் காட்சியில் நாள்தோறும் கலைநிகழ்ச்சிகளும் முற்போக்குச் சிந்தனையாளர்களின் உரைவீச்சும் நடைபெறவுள்ளன.
நவீன தமிழ்நாட்டைச் செதுக்கி, செழுமைப்படுத்திய முற்போக்கு இயக்கங்களின் அரசியலை அறியவும்; அரசியல் உணர்வு பெறவும் அறிவுத்திருவிழாவில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கிறோம்!” என தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 