தமிழகத்தில் ஒரே நாளில் 3 அரசியல் கொலை தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் நகர அதிமுக வட்ட செயலாளரான பத்மநாதன் நேற்று அதிகாலை திருப்பணாம்பாக்கம் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர் மீது காரை மோதிச் சாய்த்த ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் கூட்டுறவு அணி மாவட்ட செயலாளர் செல்வகுமார், இளையான்குடி சாலையில் செல்கும் போது மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேரூராட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் உஷாராணியின் கணவர் ஜாக்சனை இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் வெட்டிப்படுகொலை செய்திருக்கிறது.

தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு முழுமையாக தோல்வியடைந்து விட்டது என்பதையே இந்த படுகொலைகள் காட்டுகின்றன. படுகொலை செய்யப்பட்டவர்கள் அனைவருமே முன்விரோதம் காரணமாகத் தான் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறி காவல்துறை அதன் கடமையை தட்டிக்கழிக்கக் கூடாது. கொல்லப்பட்ட மூவருக்குமே முன்விரோதம் இருந்திருக்கிறது என்பது உண்மை தான்.

அரசியலில் இருக்கும் ஒருவருக்கு எவருடனாவது முன்விரோதம் இருந்தால், அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தான் பொருள் ஆகும். அதனால், அவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஆய்வு செய்து, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய காவல்துறை தவறி விட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலையாயக் கடமை சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பது தான். ஆனால், எந்த அச்சமும் இல்லாமல் குற்றவாளிகள் நடமாடுகின்றனர். இதைத் தடுக்க முடியாமல் காவல்துறை திணறிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவதற்கு இது தான் காரணமாகும். இனியாவது காவல்துறையை தட்டி எழுப்பி , தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும். அதை செய்ய முடியா விட்டால், தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here