தமிழ்நாடு முழுவதும் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பம் பதிவு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான கடந்த மே 6 ஆம் தேதி முதல் துவங்கியது. பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமாா் 2 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.
அந்த வகையில், நடப்பாண்டு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு இணைய வழியில் நடத்தப்பட உள்ளது. மே 6 ஆம் தேதி முதல் மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்தோடு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதன்படி, கலந்தாய்வில் பங்கேற்பதற்காக நேற்று வரை 2 லட்சத்து 48 ஆயிரத்து 848 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. குறிப்பாக மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வு எழுதி தேர்வாக வேண்டும் என்பதால் பெரும்பாலானோர் பொறியியல் பக்கம் திரும்பி இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.