முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளே விநாயகர் சதுர்த்தி. இந்த சிறப்புமிக்க நாள், ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தடைகளை நீக்கி, சுபிட்சத்தையும் வெற்றியையும் அருளும் விநாயகப் பெருமானை இந்த நாளில் முறையாக வழிபடுவதால், சகல நன்மைகளும் கிட்டும் என்பது நம்பிக்கை. 2025 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி, ஆகஸ்ட் 27 ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் விநாயகரை எப்படி வழிபட வேண்டும், எந்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டும், அதன் பலன்கள் என்ன என்பதை இங்கு விரிவாகக் காணலாம்.
சதுர்த்தி திதி நேரம்:
இந்த ஆண்டு சதுர்த்தி திதியானது ஆகஸ்ட் 26 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 2:22 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 27 ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 3:52 மணி வரை நீடிக்கிறது. பொதுவாக, உதய திதியை அடிப்படையாகக் கொண்டு பண்டிகைகள் கொண்டாடப்படுவதால், ஆகஸ்ட் 27 ஆம் தேதி புதன்கிழமையன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, ஞானகாரகனான புதன் கிழமையில் அமைவதால், கல்வியில் சிறக்க விரும்பும் மாணவர்கள் விநாயகரை வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.
வீட்டைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் சிலை பிரதிஷ்டை:
விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, வீட்டை சுத்தம் செய்யக்கூடாது என்பது ஐதீகம். எனவே, ஆகஸ்ட் 24 அல்லது ஆகஸ்ட் 25 ஆம் தேதிகளில் வீட்டை முழுமையாகச் சுத்தம் செய்து, வழிபாட்டிற்குத் தயார்படுத்திக் கொள்வது நல்லது. சதுர்த்திக்கு முதல் நாள் மாலை அல்லது சதுர்த்தி நாளன்று காலையில், புதிதாக வாங்கப்பட்ட களிமண் விநாயகர் சிலையை வீட்டிற்குள் கொண்டு வர வேண்டும். பூஜை அறையில் அல்லது வீட்டின் வடகிழக்கு மூலையில், மரப்பலகை அல்லது ஒரு சிறிய மேசை மீது அரிசி மாவில் கோலமிட்டு, அதன் மேல் வாழை இலை விரித்து பச்சரிசி பரப்ப வேண்டும். இந்த பச்சரிசியின் மீது மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, பின்னர் களிமண் விநாயகர் சிலையை வைக்கலாம்.
விநாயகர் சதுர்த்தி பூஜை முறை:
விநாயகர் சிலையை வைத்த பிறகு, செம்மண், சந்தனம், குங்குமம், பூக்கள், அருகம்புல் மாலை ஆகியவற்றால் அலங்கரிக்க வேண்டும். விநாயகருக்கு மிகவும் பிடித்தமான அருகம்புல் மாலை அணிவிப்பது சிறப்பான பலன்களைத் தரும். அதன்பின்னர், விநாயகரை முழுமனதோடு நினைத்து, “கணபதி மந்திரங்கள்” மற்றும் “விநாயகர் அகவல்” போன்றவற்றை உச்சரித்து வழிபட வேண்டும். விநாயகர் சதுர்த்தி நாளில் 21 வகையான இலைகளால் விநாயகரை அர்ச்சிப்பது மிகவும் விசேஷமானது. இதில் அருகம்புல், வில்வ இலை, துளசி, வாழை இலை, மா இலை, எலுமிச்சை இலை போன்றவை அடங்கும். இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, நேர்மறை அதிர்வலைகள் அதிகரிக்கும்.
நைவேத்தியங்கள் மற்றும் பலன்கள்:
விநாயகர் வழிபாட்டில் நைவேத்தியங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், அவல், பொரி, அப்பம், தேங்காய், எள் உருண்டை, லட்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம். இந்த நைவேத்தியங்களை படைத்து, தூப தீப ஆராதனை காட்டி, முழு மனதோடு விநாயகரை வழிபடும்போது, அவர் மனம் குளிர்ந்து பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அருள்வார் என்பது நம்பிக்கை. விநாயகர் சதுர்த்தி நாளில் முறையாக விரதம் இருந்து, விநாயகரை வழிபடுபவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றமும், திருமணத் தடைகள் நீங்கி சுப காரியங்கள் நடப்பதும், பொருளாதார வளம் பெருகும். மேலும், வாழ்வில் இருக்கும் அனைத்துத் தடைகளும் நீங்கி, நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.