ஆடி மாதம் வந்துவிட்டாலே ஆன்மிக விழாக்கள் களைகட்டிவிடும். அதில் முக்கியமானது வரலட்சுமி விரதம். அன்னை மகாலட்சுமியைப் போற்றி வழிபடும் இந்த நாள், சுமங்கலிப் பெண்களுக்குச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. செல்வம், செழிப்பு, மாங்கல்ய பாக்கியம் ஆகியவற்றை வேண்டிப் பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு, ஆகஸ்ட் 8ஆம் தேதி வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும், எந்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டும், வழிபாட்டு முறைகள் என்னென்ன என்பது குறித்த முழுமையான தகவல்கள் இங்கே.
வரலட்சுமி விரதத்தின் சிறப்பம்சம்
வரலட்சுமி விரதம் என்பது செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியைப் போற்றும் ஒரு புண்ணிய நாள். இதை ஆடி மாத பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடுவது மரபு. இந்த ஆண்டு, வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 8, வெள்ளிக்கிழமை வருகிறது. பொதுவாக, வெள்ளிக்கிழமை என்பது லட்சுமி தேவிக்கு உகந்த நாள். இந்த நாளில் விரதம் இருப்பது குடும்பத்தில் அமைதியையும், செல்வத்தையும் பெருக்கும் என்பது ஐதீகம். திருமணம் ஆகாத பெண்கள் நல்ல வரன் கிடைக்கவும், திருமணமான பெண்கள் கணவரின் நலனுக்காகவும், மாங்கல்ய பாக்கியம் நீடிக்கவும் இந்த விரதத்தை மேற்கொள்கின்றனர்.
பூஜைக்கான ஏற்ற நேரங்கள்
விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் சரியான நேரத்தில் பூஜையைத் தொடங்குவது மிகவும் முக்கியம். இந்த ஆண்டு வரலட்சுமி விரத பூஜைக்கான நல்ல நேரங்கள்:
- காலை நல்ல நேரம்: காலை 9:15 முதல் 10:15 வரை. இந்த நேரத்தில் பூஜை செய்தால், நாள் முழுவதும் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும்.
- மதிய கெளரி நல்ல நேரம்: மதியம் 12:15 முதல் 1:15 வரை.
- மாலை நல்ல நேரம்: மாலை 4:45 முதல் 5:45 வரை. இந்த நேரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
- மாலை கெளரி நல்ல நேரம்: மாலை 6:30 முதல் 7:30 வரை. அலுவலகம் செல்லும் பெண்கள் இந்த நேரத்தில் பூஜையை நிறைவு செய்யலாம்.
ராகு காலம் மற்றும் எமகண்டம் போன்ற நேரங்களில் பூஜையைத் தவிர்ப்பது நல்லது. காலை 10:30 முதல் 12:00 வரை ராகு காலமும், மாலை 3:00 முதல் 4:30 வரை எமகண்டமும் உள்ளது.
வரலட்சுமி விரதம் பூஜை செய்யும் முறை
வரலட்சுமி விரதத்தை இரண்டு முறைகளில் கடைப்பிடிக்கலாம். ஒன்று, மகாலட்சுமி படத்தின் முன் எளிமையாக பூஜை செய்வது. மற்றொன்று, கலசம் வைத்து வழிபடுவது.
எளிமையான பூஜை முறை: விரதம் இருக்கும் பெண்கள் காலையில் எழுந்து நீராடி, தூய்மையான ஆடை அணிந்து கொள்ள வேண்டும். வீட்டைச் சுத்தம் செய்து, லட்சுமி படத்திற்கு மாலையிட்டு, தீபமேற்றி வழிபடலாம். இந்த முறையில், நைவேத்தியங்களை வைத்து, லட்சுமி துதி பாடல்களைப் பாடி, கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்யலாம்.
கலசம் வைத்து பூஜை செய்யும் முறை: இது மிகவும் விரிவான முறையாகும். ஒரு புதிய கலசத்தில் தண்ணீர், அரிசி, குங்குமம், மஞ்சள், நாணயம், எலுமிச்சை போன்ற மங்கலப் பொருட்களை இட வேண்டும். கலசத்தின் மேல் மாவிலைகளை வைத்து, அதன் மீது தேங்காய் வைக்க வேண்டும். தேங்காயில் மஞ்சள் பூசி, அதன் மீது ஒரு சிறிய துணியில் லட்சுமியின் முகம் அல்லது உருவத்தைப் பொருத்தி அலங்கரிக்கலாம். பின்னர், இந்த கலசத்தை லட்சுமி தேவியாக பாவித்து, பலவிதமான மலர்களால் அலங்கரித்து, சிறப்பு பூஜைகளைச் செய்ய வேண்டும். இந்த கலசத்தை அடுத்த நாள் அல்லது மூன்றாவது நாள் புனர்பூஜை செய்து, அதன் உள்ளிருக்கும் தண்ணீரை வீட்டு முழுவதும் தெளித்து, மற்ற பொருட்களைப் பயன்படுத்தலாம்.
நைவேத்தியங்கள் மற்றும் வழிபாட்டுப் பொருட்கள்
வரலட்சுமி பூஜையின்போது லட்சுமி தேவிக்கு பிடித்தமான பொருட்களை நைவேத்தியமாகப் படைப்பது சிறப்பு. பொதுவாக, பொங்கல், சுண்டல், பாயசம், வடை, புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம். பூஜைக்காக தாம்பூலம், வெற்றிலை, பாக்கு, பழங்கள், இனிப்புகள், மலர்கள், குங்குமம், மஞ்சள், வளையல் போன்ற மங்கலப் பொருட்களைப் பயன்படுத்துவது அவசியம். லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் போன்றவற்றை வாசிப்பது விரதத்தின் பலனை அதிகரிக்கும். பூஜை முடிந்த பின், பிரசாதங்களை அக்கம் பக்கத்தினருக்கும், உறவினர்களுக்கும் வழங்கி, பெரியோர்களிடம் ஆசி பெறுவது மிகவும் நல்லது.