அதிமுகவிலிருந்து விலகி முதலமைச்சர் மு.க. Stalin முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுகவின் செயல்பாடுகள் குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படையாகப் பதிவு செய்தார்.
வைத்திலிங்கம் தனது பேட்டியில், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் செயல்பாடு தற்போது சிறந்ததாக இல்லை. ஒரு காலத்தில் மக்களுக்காக இயங்கிய கட்சி, இப்போது திசைமாறி நிற்கிறது. ஆனால், அதே வேளையில் முதலமைச்சர் மு.க. Stalin அவர்களின் செயல்பாட்டைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் போற்றுகிறார்கள். சாமானிய மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர் செயல்படுகிறார்,” என்று தெரிவித்தார்.
மேலும், “தமிழ்நாட்டு மக்களின் மனதில் முதலமைச்சர் Stalin நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே உண்மையாகப் பாடுபடுகிறது என்பதை உணர்ந்தே நான் இந்த முடிவை எடுத்தேன். இனியும் அதிமுகவில் தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை என்பதால், மக்கள் நலன் காக்கும் திமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன்,” என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த வைத்திலிங்கத்தின் இந்த விமர்சனம், அதிமுக தலைமைக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

