தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரப்புரை இறுதி வாரத்தை எட்டியுள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவர் விரிவாகப் பேசியுள்ளார். குறிப்பாக, “2021 தேர்தலின் போது சிலர் ‘ஸ்டாலின் கலைஞரை விட அதிக ஆபத்தானவர்’ எனக் கூறினார்கள். தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும், நம்முடைய வளர்ச்சியைத் தடுக்க நினைப்பவர்களுக்கும் நான் என்றைக்குமே டேஞ்சர் தான்” என அவர் ஆக்ரோஷமாகப் பதிலளித்துள்ளார்.
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டினார். “எந்த மாநிலமும் எட்டாத வகையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாக உயர்ந்து இரட்டை இலக்கைத் தொட்டுள்ளது. சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி என்பதே எமது ஆட்சியின் முதன்மையான குறிக்கோள்” என அவர் தெரிவித்தார். மகப்பேறு உதவித்தொகை, மகளிர் விடியல் பேருந்து பயணம், காலை உணவுத் திட்டம் மற்றும் ‘நான் முதல்வன்’ திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் பயனடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஒன்றிய அரசின் ‘தொகுதி மறுவரையறை’ மசோதாவைத் தமிழகம் எப்படி எதிர்கொண்டது என்பது குறித்துப் பேசிய ஸ்டாலின், “மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி சிறப்பாகச் செயல்படும் தமிழகத்தைத் தண்டிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அந்த மசோதாவை நாம் கொளுத்திய நெருப்புதான் இன்று சாம்பலாக்கி இருக்கிறது. தமிழகத்தின் உரிமைகளுக்காக எப்போதுமே நான் களத்தில் நின்று போராடுவேன்” என்றார். திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பொய்ப் பிரச்சாரத்தையும் அவர் கடுமையாகச் சாடினார். ரூ.7,000 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்களை மீட்டதும், ஆயிரக்கணக்கான கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தியதும் திமுக அரசுதான் என்பதை அவர் ஆதாரங்களுடன் விளக்கினார்.
எதிர்க்கட்சியான அதிமுகவை விமர்சித்த முதல்வர், “பாஜக என்ற ஓனருக்கு அதிமுக ஒரு அடிமை கட்சி. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராகக் கொடுமைகள் நடக்கும்போது எடப்பாடி பழனிசாமி அமைதி காக்கிறார். ஆனால், திமுக இருக்கும் வரை மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் கால் பதிக்க முடியாது” என எச்சரித்தார். 1970-களில் மிசா காலத்திலேயே ஒன்றிய அரசை எதிர்த்துப் போராடியவன் நான் என்றும், இப்போது உங்கள் வீட்டுப் பிள்ளையாகத் தமிழகத்தைப் பாதுகாக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.
தனது உரையின் இறுதியில், தமிழகத்தின் உரிமைகள், கலாச்சாரம் மற்றும் மொழியைப் பாதுகாக்கத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அடுத்த 5 ஆண்டுகளும் இந்த நல்லாட்சி தொடரவும், தமிழகம் மேலும் உயரத்தை எட்டவும் உதயசூரியன் சின்னத்திலும், கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களிலும் வாக்களிக்க வேண்டும் என அவர் உரிமையோடு கேட்டுக்கொண்டார். இந்த வீடியோ தற்போது தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

