“ஏமாற்றி வாக்குகளை வாங்குவதுதான் திமுகவின் வேலை” – தூத்துக்குடியில் சீமான் ஆவேசம்!

திமுகவின் ஏமாற்று அரசியலையும், கரூர்-தூத்துக்குடி விவகாரங்களில் அரசின் மெத்தனத்தையும் விளாசிய நாம் தமிழர் தலைவர் சீமான்.

prime9logo
2431 Views
3 Min Read
Highlights
  • திமுக ஏமாற்றி வாக்குகளை வாங்குவதையே வேலையாகக் கொண்டுள்ளது என சீமான் விமர்சனம்.
  • கரூர் சம்பவம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகளில் அரசின் அணுகுமுறை குறித்து கேள்வி.
  • தம்மை 'பாஜகவின் ஏ டீம்' என கூறுபவர்களை நோக்கி, "அப்போ திமுக 'பி டீமா'?" என சீமான் வினா.
  • கல்வியாளர் மாநாட்டில் திரைத்துறையினர் பங்கேற்றதை விமர்சித்து, விஜய் அரசியல் ஆசையைக் கண்டிப்பு.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, திமுகவின் அரசியல் செயல்பாடுகள் குறித்து அனல் பறக்கும் விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, கரூர் சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் திரைத்துறையினரின் அரசியல் பிரவேசம் ஆகியவை குறித்து அவர் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

கரூர் விவகாரத்தில் கண்டனம்

கரூர் சம்பவத்தை அரசியல் நோக்குடன் பேசுவதை தான் வெறுப்பதாக சீமான் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் குறித்து ஒருசில தலைவர்கள் வேதனை கூட தெரிவிக்காதது வருத்தம் அளிப்பதாகக் கூறிய அவர், இனிமேல் கரூர் போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். திமுக-வினால் தன்னை கட்டுப்படுத்த முடியாததால்தான் சிறையில் அடைத்தனர் எனக் குற்றம் சாட்டினார். மேலும், “ஏமாற்றி வாக்குகளை வாங்குவதுதான் திமுகவின் வேலை” என நேரடியாக விமர்சித்தார்.

திமுக-பாஜக கூட்டணி குறித்து கேள்வி

தம்மை எதிர்த்துப் பேசினால், உடனடியாக பாஜகவின் ‘ஏ டீம்’ என்று முத்திரை குத்துவதாகக் குறிப்பிட்ட சீமான், “அப்படியானால் திமுக ‘பி டீமா’?” எனக் கேள்வி எழுப்பினார். வரும் தேர்தலில் பாஜக போட்டியிலேயே இல்லை என்று தெரிவித்த அவர், ஏனென்றால் பாஜகவே அதிமுகவின் முதுகுக்குப் பின்னால்தான் நிற்கிறது. இந்தத் தேர்தலில் போட்டி என்பது அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையில்தான் நடக்கும் என்று உறுதியாகக் கூறினார். கரூர் விவகாரத்தில் அண்ணன் திருமாவளவன் பேசுவது உண்மையாக இருக்கலாம், ஏனென்றால் அவர் திமுக கூட்டணியில் இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நீதியின் நிலை என்ன?

மத்திய அரசுக்குத் தூத்துக்குடி விவகாரம் கண்ணுக்குத் தெரியவில்லை, ஆனால் கரூர் விவகாரம் மட்டும் கண்ணுக்குத் தெரிகிறதா? என்று சீமான் வினா எழுப்பினார். தூத்துக்குடியில் மனு கொடுக்க வரும் இடத்தில் கலவரம் நடக்கும் என்று எப்படித் தெரியும்? காத்திருந்து துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி கொடுத்துச் சுட்டுக் கொல்லச் சொன்னது யார்? என்று ஆவேசமாகக் கேட்டார்.

மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் விசாரணை நடத்திய அதே ஒரு நபர் விசாரணை ஆணையம்தான் கரூர் விவகாரத்தையும் விசாரணை நடத்துகிறது என்றும் குறிப்பிட்டார். தூத்துக்குடி விவகாரத்தில் விசாரணை ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுத்தது? தேர்தலை முன்னிட்டு கண்துடைப்புக்குத்தான் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். கரூர் விவகாரத்தில் அதன் கட்சித் தலைவர்தான் பொறுப்பேற்க வேண்டும். ஒரு சிறிய வருத்தம் தெரிவித்துவிட்டு அப்படியே இருந்துவிட்டால் போதுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

கல்வியாளர் மாநாடு குறித்த விமர்சனம்

நாட்டில் கல்வியாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், ஆனால் கல்வியாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் யார் யார்? முதல்வர், துணை முதல்வர், திரைத்துறையினர்! என்று விமர்சனம் செய்தார். திரைத்துறையினரை இப்படிப் பயன்படுத்துவதால்தான் அவர்களுக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை வருகின்றது. இதனால் தான் திரையில் உள்ளவன் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றார் என்றும் குற்றம்சாட்டினார்.

கல்வியாளர் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் விஜய்க்கு ஓட்டுப் போடுவார்களா? விஜய் பேச்சை யாராவது கேட்கிறார்களா? அவர் படம் ரிலீஸ்சானால் முதல்நாள் கூட்டம் எப்படி இருக்குமோ அப்படிதான் நடந்து கொள்கிறார்கள். விஜய் செல்லும் இடங்களில் மற்றபடி அவர் பேச்சைக் கேட்க அல்ல. கல்விக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது குறித்து திமுக நடத்திய கல்வி மாநாட்டில் கலந்துகொண்டவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று சாடினார்.

வரும் தேர்தல் களம் தனித்தே!

கரூர் சம்பவத்தை வைத்து கூட்டணிகள் மாறும் என்பது தனக்குத் தேவையில்லை. நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடுகின்றது என்று உறுதிபடத் தெரிவித்தார். திமுகவுக்கும் தவெக-விற்கும் தான் போட்டி என்று சொல்லும் விஜய், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடக்கும்போது எங்கு சென்றார்? அன்று திமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தான் போட்டி நடந்தது என்று அழுத்தமாகத் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply