பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் மலிவு விலையில் சன்ன ரக அரிசி விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி தனியார் அரிசி ஆலைகள் உள்ளிட்ட ஆதாரங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட அரிசி, கிலோ ரூ.30 என்ற விலையில் 5 கிலோ பைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே ரத்தினமங்கலம் நியாயவிலைக் கடையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மு.வீரப்பன் தலைமையில் அமைச்சர் த.சரத்குமார் பொதுமக்களுக்கு அரிசியை வழங்கி விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 இடங்களில் அரிசி விற்பனை நடைபெறுகிறது. ஆலந்தூர் நங்கநல்லூர் முதல் பிரதான சாலையில் உள்ள ஜெ.ஜெ. நங்கநல்லூர் தொடக்கக் கூட்டுறவு பண்டகசாலை, ஆதம்பாக்கம் கேசரி நகர் பிரதான சாலையில் உள்ள கஸ்தூரிபா மகளிர் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையின் சிறு அங்காடிப் பிரிவு, கல்பாக்கம் சட்ராஸ் பிரதான சாலையில் உள்ள அணுசக்தித் துறை பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை ஆகிய இடங்களில் இந்த அரிசி கிடைக்கும்.
பொதுச் சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகம் முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டத்திலும் விற்பனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

