திமுகவுக்கு அரணாக மதிமுக இருக்கும் என தான் கருதியதாகவும், ஆனால் கூட்டணியில் இருந்து மதிமுக 99.9% விலகிவிட்டதாகவும் மல்லை சத்யா விமர்சித்துள்ளார்.
திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவரான மல்லை சத்யா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “திராவிட வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எங்கள் கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அடுத்த மாதத்துக்குள் பதிவு செய்யப்பட்டு விடும்.
திராவிட வெற்றிக் கழகத்தை, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பின், ஊராட்சிகள் தோறும் உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வோம். அதன்பின் உள்கட்சித் தேர்தல் நடத்தப்படும். தந்தை பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஆண்டு திருச்சியில் நாங்கள் விழா எடுக்க இருக்கிறோம். மேலும், கடந்த ஆண்டு வழங்கப்பட்டதைப் போலவே இந்த ஆண்டும், திராவிட ரத்னா விருதை வழங்க உள்ளோம்.
கடந்த ஆண்டு நவம்பர் 20-ம் தேதி திராவிட வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது. அதன் இரண்டாம் ஆண்டு விழாவின்போது, நீலாங்கரையில் திராவிட இல்லத்தை திராவிட வெற்றிக் கழகத்தின் தலைமையகமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளோம்.
திமுக கூட்டணியில் இருந்து பலர் விலகியபோது, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளோடு மதிமுகவை ஒப்பிடக் கூடாது என வைகோ சொன்னார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் திமுகவுக்கு தொடர்ந்து அரணாக இருப்பார் என்று நினைத்து மன நிறைவு கொண்டேன். ஆனால், அதில் மண் விழுந்துவிட்டது. திமுக கூட்டணியில் இருந்து 99.9% விலகி வைகோ நெடுந்தூரம் பயணம் செய்து கொண்டிருக்கிறார். இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மதிமுக, மகன் திமுகவாக மாறிவிட்டதை இது தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.
கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சி சிறப்பாக இருந்தது. மக்கள் மத்தியில் எந்த அதிருப்தியும் இல்லை. திமுகவின் தேர்தல் தோல்விக்கு கூட்டணி கட்சிகள்கூட காரணமாக இருந்திருக்கலாம். குறிப்பாக, வைகோவின் இல்லத்துக்கு விஜய் சென்றபோது, அவர் துரை வைகோவை அறிமுகப்படுத்தினார். அப்போது, இவர்கள் எல்லாம் விசிலுக்கு வாக்களித்தார்கள் என்று வைகோ சொன்னார். இதுதான் கூட்டணி நிலைப்பாடா?
தேர்தலின்போது கூட்டணி கட்சிகளின் பங்களிப்பு முழுமையாக இல்லை. மு.க.ஸ்டாலின் ஆட்சி முடிவுக்கு வந்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும், திமுக மீண்டும் எழும். மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்று அவர் கூறினார்.

