தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்களான ‘Virtual Warriors’ மீது இன்ஸ்டாகிராம் பிரபலமான வைஷ்ணவி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் ஆபாச அவதூறு புகார் அளித்துள்ளார். தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த வைஷ்ணவி, தனக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஆபாசமான மற்றும் அவதூறான கருத்துகள் பரப்பப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணான வைஷ்ணவி, இன்ஸ்டாகிராமில் அரசியல் மற்றும் சமூகக் கருத்துகளைப் பேசி பிரபலமானவர். மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகி திமுகவில் இணைந்த அவர், தனது கட்சித் தாவலுக்கான காரணத்தையும் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். தவெக, பாஜகவின் மற்றொரு வடிவம் என்றும், இளைஞர்களுக்கு அங்கு முன்னுரிமை இல்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பகிரக்கூடாது என தனக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போது வைஷ்ணவி தவெக தலைவர் விஜய் மற்றும் தவெக தொண்டர்களான ‘Virtual Warriors’ மீது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். தவெகவிலிருந்து வெளியேறிய நாள் முதல், தன்னைப்பற்றி தவெகவினர் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருவதாக வைஷ்ணவி தனது புகாரில் தெரிவித்துள்ளார். தனது புகைப்படங்களை மார்ஃபிங் செய்தும், ஆபாசமான மீம்ஸ்களைப் பதிவிட்டும், முகம் சுளிக்க வைக்கும் வகையில் செயல்படுவதாக ‘Virtual Warriors’ மீது அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து தவெக தலைவர் விஜய் வாய்மொழியாகவோ அல்லது அறிக்கையாகவோ கண்டனம் தெரிவிப்பார் என தான் காத்திருந்ததாகவும், ஆனால் விஜய் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இனி இல்லை என்றும் வைஷ்ணவி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்தே அவர் விஜய் மீதும், தவெக தொண்டர்கள் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் தமிழக அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையின் விசாரணைக்குப் பின்னரே இப்புகாரின் உண்மைத்தன்மை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தெரியவரும்.