‘குதிரை பேரத்தில் ஈடுபடும் தவெக அரசு மற்றும் தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஆளுநர் ஆர்.வி.அர்லேகரிடம் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேற்று மனு அளித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஏற்கெனவே அதிமுகவின் 6 எம்எல்ஏக்களை குதிரை பேரத்தின் மூலமாக பல கோடி ரூபாய்க்கு விலை பேசி, அவர்களை ராஜினாமா செய்ய வைத்ததால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
தங்கள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள இதுபோன்ற விதிகளுக்கு முரணாக தவெக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசின் மூத்த அமைச்சராக இருப்பவர், அதிமுகவின் 15 எம்எல்ஏக்கள் விரைவில் தவெகவுக்கு வருவார்கள் என்று மேடைகளில் பேசுகிறார்.
அப்படி என்றால் தமிழகத்தில் குதிரை பேரம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த அரசு மீதும், துணைபோகும் அமைச்சர்கள் மீதும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடிதம் கொடுத்திருக்கிறோம்.
ஏற்கெனவே, அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் மனு கொடுத்திருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனால் இன்று ஆளுநரிடம், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட மனுவின் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். உரிய நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் உறுதி அளித்துள்ளார்.
அதிமுக தோற்றது குறித்து சி.வி.சண்முகம் வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 2019-ல் அதிமுக ஆட்சியில், சி.வி.சண்முகம் மாவட்டச் செயலாளராக இருந்தபோது, விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது அதிமுகதான் வெற்றி பெற்றது.
இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெல்வது வழக்கமான ஒன்று. சி.வி.சண்முகம் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பழனிசாமியிடம் கருத்துகளை சொல்ல விரும்பினால் அதைக் கேட்க அவர் தயாராக உள்ளார். இயக்கத்தை காப்பாற்ற பழனிசாமி எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

