தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பரப்புரையை மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று கூடலூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தி.மு.க. அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடுமையாக விமர்சித்துப் பேசினார். தி.மு.க.வின் நான்காண்டு ஆட்சியில் எந்தவொரு பெரிய திட்டங்களையும் கூடலூர் பகுதிக்கு கொண்டு வரவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில், மலை கிராமங்களில் உள்ள ஏழை மாணவர்கள் உயர்கல்வி பயில ஏதுவாக அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டது. மேலும், நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, உதகையில் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது. இந்த மருத்துவக் கல்லூரியின் 50 சதவீத பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவு செய்யப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தி.மு.க. அரசு, பணிகளை நிறைவு செய்துவிட்டு, அவர்களது ஆட்சியில் கட்டியது போல ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா கண்டதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
திமுக அரசின் சாதனைகள் ஸ்டிக்கர் மட்டுமே: அ.தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களையும் தி.மு.க. அரசு வெறும் ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா கண்டுள்ளது என்று குற்றம் சாட்டினார். நான்கு ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் அவர்களால் எந்தவொரு பெரிய திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை என்றும், இதுதான் தி.மு.க.வின் சாதனை என்றும் அவர் குறிப்பிட்டார். உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வெறும் மருத்துவக் கல்லூரி அல்ல, அனைத்து வசதிகளும் கொண்ட உயர்தர மருத்துவமனை என்றும், மலைவாழ் மக்களுக்கு தரமான அறுவை சிகிச்சை வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது என்றும் பழனிசாமி தெரிவித்தார்.
இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் நியமிக்கப்படாததால், மக்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை கிடைக்காத அவல நிலை உள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார். 2011 முதல் 2021 வரை அ.தி.மு.க. ஆட்சி பொற்கால ஆட்சி என்றும், கல்வியில் புரட்சியை ஏற்படுத்தி இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தை உயர்த்திய பெருமை அ.தி.மு.க.வையே சேரும் என்றும் அவர் பெருமிதம் கொண்டார்.
குடும்ப ஆட்சிக்கு ரோல் மாடல் திமுக: 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 67 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் உட்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும், 21 பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள் என எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். சேலம் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்ததாகவும், அதை திறக்க தி.மு.க. அரசுக்கு மனம் இல்லை என்றும் அவர் சாடினார்.
உயர்கல்வி தான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை என்றும், கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலத்திலேயே பொருளாதாரம் சிறந்து விளங்கும் என்றும் அவர் கூறினார். நேற்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நாட்டிலேயே ஸ்டாலினின் ஆட்சி தான் ரோல் மாடல் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதிலும், ஊழல், கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன், டாஸ்மாக் மூலம் ரூ. 10 கூடுதலாக வசூலிப்பதிலும் தி.மு.க. அரசு தான் ரோல் மாடலாக உள்ளது” என்று கூறினார். மேலும், “குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு ரோல் மாடலாக இருப்பது தி.மு.க. தான்” என்றும் அவர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.