வடகிழக்குப் பருவமழையின் தீவிர அபாயங்களை தமிழக அரசு அலட்சியப்படுத்தி வருவதாகக் கூறி, சென்னையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது: மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் வெயில் கடுமையாக இருக்கும். எல்லோரும் மின்சாரம் அதிகமாகப் பயன்படுத்துவார்கள்.
இதனால் கடந்த நவம்பரில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ஒரு யூனிட் ரூ.20-க்கு வாங்குவதற்கு எல்லா வேலையும் செய்துவிட்டு வந்தார். ஆனால் ‘ஆதவ் அர்ஜுனா’ கம்பெனி அந்த டெண்டரை ரத்து செய்துவிட்டது. அந்த டெண்டரை செயல்படுத்தியிருந்தால் இந்த 3 மாதத்தில் சென்னையில் மின்தடை வந்திருக்காது.
ஆந்திராவுக்குப் போய் ஒரு யூனிட் ரூ.37-க்கு வாங்குவதன் மூலம் இந்த அரசாங்கத்திற்கு ஒரு லட்சம் கோடி நஷ்டம் வருகிறது. மக்கள் இவர்களைப் பற்றித் தெரிந்துகொண்டு விட்டார்கள். இதை இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் பார்த்தோம். ஏழரை நாட்டுச் சனி நம்மை விட்டு ஓடிப் போயிருச்சு.
அந்த சனியன்களைச் சுமந்ததுனாலதான் நாம் கோட்டைக்குப் போக முடியல. அவர்களுக்குக் கொடுத்த சீட்டில் நாம் நின்றிருந்தால் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்திருப்போம். இதை தாராபுரத்திலும், மதுராந்தகத்திலும் மக்கள் வெட்டவெளிச்சமாக காட்டிவிட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மேயர் பிரியா, தலைமை வகித்துப் பேசுகையில், “தவெக அரசு சென்னை மாநகராட்சியை முற்றிலும் புறக்கணித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.700 கோடி பணிகளை ரத்து செய்துள்ளன” என்றார்.

