பெண்கள் குறித்து அவதூறாகப் பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும்: பேரவையில் முதல்வர் விஜய் எச்சரிக்கை

Priya
723 Views
2 Min Read

‘பெண்கள் குறித்து யாராவது இரட்டை அர்த்தத்திலோ, அவதூறாகவோ பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று முதல்வர் விஜய் எச்சரித் துள்ளார்.

சட்டப்பேரவையில் காவல், தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் விஜய் நேற்று பேசியதாவது: அரசியல்ரீதியில் ஒருவரை ஒருவர் விமர்சிக்கலாம். அது கடுமையாகக்கூட இருக்கலாம்.

யாருடைய கருத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். தனிப்பட்ட முறையில் மக்களையோ, பெண்களையோதரம் தாழ்த்திப் பேச வேண்டாம். இது எல்லோருக்குமான பொதுவான வேண்டுகோள்.

சமீபகாலமாக தமிழகத்தில் ஆபாச நதியும், வன்ம நதியும் ஓடுகின்றன. பெண்கள் பற்றி அவதூறாகவும், அசிங்கமாகவும் பேசுவதை மக்கள் கவனித்து வருகிறார்கள்.

பெண்களைப் பற்றி யாராவது இரட்டை அர்த்தத்திலோ, அவதூறா கவோ, அசிங்கமாகவோ பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும். இதை அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பேசுவதாக யாராவது நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஒரு பெண்ணாக எவ்வளவு அவமானங்களைச் சந்தித்தார் என்பதையெல்லாம் நாம் கேள்விப்பட்டுள்ளோம். இதே சட்டப்பேரவையில், இதே எதிர்க் கட்சியால் எவ்வளவு அவமானங்களைச் சந்தித்துள்ளார் என்பதையும் அறிவோம்.

அதெல்லாம் வேறு எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். தொழில்நுட்பமும் நாகரிகமும் வளர்ந்திருக்கிறது. அரசியல்ரீதியாக என்ன வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.

அதுதான் கருத்துரிமை, பேச்சுரிமை. ஆனால் சில நாட்களுக்கு முன், ஒரு உறுப்பினர் ‘எலும்பை உடைப்பேன்’ என்கிறார். இதுதான் அரசியலா? இதையெல்லாம் பார்த்துதான் மக்கள் அவர்களை அந்தப் பக்கம் (எதிர்க்கட்சியில்) அமர வைத்திருக்கிறார்கள்.

இன்னொரு மூத்த உறுப்பினர் பேசும்போது, ‘மக்கள் தங்கள் கட்சிக்கு வாக்களிக்காததால் அவர்களுக்கு நல்ல சாவே வராது’ என்கிறார். இதே மக்கள்தான் அவர்களுக்கு 50 – 60 ஆண்டுகளாக வாக்களித்துள்ளனர்.

அவர்களைப் பார்த்து எப்படி அந்த வார்த்தையைச் சொல்ல மனம் வருகிறது? மக்கள் தீர்ப்பை ஏற்க முடியாதபோது, ‘இவர்களை எல்லாம் மக்கள் ஏன் ஏற்க வேண்டும்?’ என்ற கேள்விதானே வரும்? ‘நாங்கள் மிசாவைப் பார்த்தவர்கள்’ எனக் கூறுகின்றனர்.

எல்லோருக்கும் அந்த மிசாவைப் பற்றிய வரலாறு தெரியும். நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply