பால் சந்தையை தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம்: தமிழக அரசுக்கு அன்புமணி சொல்லும் யோசனை

Priya
791 Views
2 Min Read

“தமிழகத்தில் தனியார் பால் விலைகள் லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடில்லாமல் பால் விலையை உயர்த்துவதற்கு காரணம், தமிழகத்தின் பால் சந்தையை தனியார் நிறுவனங்கள் அவற்றின் கைகளில் வைத்திருப்பது தான்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தனியார் பால் விலைகள் இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன. ஏழை , நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பால் விலையை தனியார் நிறுவனங்கள் மனசாட்சியின்றி மேலும், மேலும் உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது.

3 சதவீத கொழுப்பு சத்து கொண்ட நீல உறை பாலின் விலையை அரை லிட்டருக்கு ரூ.31-ல் இருந்து ரூ.32 ஆகவும், 4.5 சதவீத கொழுப்பு சத்து கொண்ட பச்சை உறை பாலின் விலையை ரூ.35-ல் இருந்து ரூ.37ஆகவும், 6 சதவீத கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு உறை பாலின் விலையை ரூ.40-ல் இருந்து ரூ.42 ஆகவும் தனியார் பால் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

இது 2026-ஆம் ஆண்டில் தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ள மூன்றாம் விலை உயர்வு ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் முதல் இப்போது வரையிலான 8 மாதங்களில் மட்டும் 3 முறை பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் மட்டும் ஜூலை, செப்டம்பர் என இரு முறை தனியார் பால் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. ஆவினில் 3 சதவீத கொழுப்பு சத்துள்ள நீல உறை பால் லிட்டருக்கு ரூ.40-க்கு விற்கப்படும் நிலையில், தனியார் நிறுவனங்கள் ரூ.24 கூடுதலாக விற்பனை செய்கின்றன.

அதேபோல், பச்சை உறை பால் ஆவினில் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தனியார் பால் விலை, ரூ.30 கூடுதலாக ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 6 சதவீத கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு உறை ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ.60 மட்டும் தான். ஆனால், அதே பாலை தனியார் நிறுவனங்கள் ரூ.84-க்கு விற்பனை செய்கின்றன.

Advertisement

தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடில்லாமல் பால் விலையை உயர்த்துவதற்கு காரணம், தமிழகத்தின் பால் சந்தையை தனியார் நிறுவனங்கள் அவற்றின் கைகளில் வைத்திருப்பது தான். தமிழகத்தின் பால் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கு, 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி வெறும் 16% மட்டுமே. இப்போது அது 12% அளவுக்கு குறைந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

அதனால், ஆவின் நிறுவனம் குறைந்த விலையில் பால் விற்பனை செய்தாலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் அந்த நிறுவனத்தால் பால் வழங்க முடியாததாலும், தனியார் நிறுவனங்கள் 84% – 88% சந்தையை தங்களிடம் வைத்திருப்பதாலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

தனியாருக்கு போட்டியாக தமிழகத்தில் 50% சந்தையை கைப்பற்றும் அளவுக்கு ஆவின் நிறுவனத்தை வலுப்படுத்தினால் மட்டும் தான் தனியார் பால் விலையை கட்டுப்படுத்த முடியும். எனவே, ஆவின் நிறுவனத்துக்கு புத்துயிரூட்டவும், தனியார் பால் விலைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயித்து அதன் விலையை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply