தமிழக பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்: பாமக நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

Priya
28 Views
2 Min Read

தமிழக அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில் ரூ.1.50 லட்சம் ஒதுக்க வேண்டும், விவசாயிகளுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

பாமகவின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி சென்னையில் நேற்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் முக்கிய அம்சங்களாக, வேளாண்துறைக்கு பட்ஜெட்டில் 1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும், குறுவை சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் மானியம், பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி, நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும், உழவர்களுக்கு உரிமைத் தொகை ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி பேசியதாவது: தமிழக வேளாண் துறைக்கு 2026-27-ம் ஆண்டுக்கு ரூ.93 ஆயிரம் கோடி மதிப்பிலான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை உருவாக்கியுள்ளோம்.

இந்த முறை மொத்த நிதி நிலை அறிக்கையில் 25 சதவீதத்தை வேளாண்துறைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், ரூ.13,000 கோடி இடுபொருள் செலவுக்கும், பயிர் காப்பீடுக்கு ரூ.30 ஆயிரம் கோடியும், வேளாண் உள்கட்டமைப்புக்கு ரூ.25 ஆயிரம் கோடியும் வழங்க வேண்டும்.

கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கப்படுவதைத் தடுக்க வேண்டும். தமிழகத்தில் ஆண்டுக்கு 125 லட்சம் டன் நெல் விளைகிறது. அதில் 40 லட்சம் டன் மட்டுமே அரசு கொள்முதல் செய்கிறது.

எனவே, நெல் கொள்முதல் அளவை உயர்த்த வேண்டும். தமிழக அரசு புதிய மணல் குவாரிகளை அமைக்கக் கூடாது. எக்காரணம் கொண்டும் ஆறுகளில் மணல் அள்ளக் கூடாது.

கேரள மாநிலம் ஆற்று மணல் அள்ள அனுமதிப்பதில்லை, அந்த உணர்வு தமிழக அரசுக்கு ஏன் இல்லை. மேலும் பரந்தூரில் சிப்காட் அமைக்கும் முடிவில் அரசு இருந்தால், அதற்கு விமான நிலையமே அமைத்து விடலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply