மரணத்தின் வலியை உணர்ந்தவன்: கரூர் சோகம் குறித்து ஆதவ் அர்ஜுனா உருக்கமான பதிவு!

தாயின் தற்கொலை வலியைச் சுமந்து கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகளுக்கு ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான X பதிவு!

prime9logo
3496 Views
2 Min Read
Highlights
  • கரூர் வேலுச்சாமிபுரம் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகம்
  • சம்பவம் நடந்து 2 நாட்களுக்குப் பின் மௌனம் கலைத்த த.வெ.க.வின் ஆதவ் அர்ஜுனா.
  • தனது தாயின் தற்கொலை மூலம் 5 வயதிலேயே மரணத்தின் வலியை உணர்ந்ததாக உருக்கம்.
  • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அண்ணனாக, மகனாக தனது வாழ்க்கைப்பயணம் இருக்கும் என உறுதி.

என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தை கடந்த 24 மணிநேரமாக அனுபவிக்கிறேன்

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக த.வெ.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் உடனடியாக எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் இந்த நீண்ட பதிவு முக்கியத்துவம் பெறுகிறது. அவர் தனது பதிவில், “என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன். இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது. மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்துசெல்ல வழியின்றி தவித்து வருகிறேன்,” என்று தனது மனத் துயரத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த மரணங்கள் தன்னை ஆழ்த்தியுள்ள மீளாத்துயரத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

5 வயதில் தாயின் தற்கொலை வலி

தற்போதைய இழப்பின் வலியை தனது சிறுவயது துயரத்துடன் ஒப்பிட்டு அவர் பகிர்ந்துள்ள செய்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள். இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது,” என்று குறிப்பிட்டிருப்பது, தனிப்பட்ட முறையில் அவர் இந்த சோகத்தை எவ்வளவு ஆழமாக உணர்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.

உறுதுணையாக இருப்பேன் என உறுதி

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான தனது ஆதரவை ஆதவ் அர்ஜுனா வலுவாகத் தெரிவித்துள்ளார். “பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், “இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன்,” என நெகிழ்ச்சியுடன் உறுதி அளித்துள்ளார்.

துயரமான இந்த வேளையில், “துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன்” என்று பதிவிட்டு, இறுதியில், ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்!’ என்றும் தனது ஆதங்கத்தையும், நம்பிக்கையையும் ஒரு சேர வெளிப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்த தமிழகமும் இந்தத் துயரத்தில் இருக்கும் நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் இந்த உணர்வுபூர்வமான பதிவு, தனிப்பட்ட வலியை ஒரு சமூகத் துயரத்துடன் இணைத்து, தான் மக்களின் துக்கத்தில் பங்கெடுக்கத் தயங்கவில்லை என்பதை உணர்த்துகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply