சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அனந்தா’. ஜெகபதி பாபு, சுஹாசினி, ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படம், ஜனவரி மாதம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்தப் படத்தின் ட்ரெயிலரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார், துர்கா ஸ்டாலின்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, “இந்த விழாவிற்கு துர்கா ஸ்டாலின் வந்தது, பாபா அவர்களின் அருள். 12 வருடங்களுக்கு முன்னால் கவிஞர் பா.விஜய் எனக்கு போன் செய்து, கலைஞரைப் பற்றிக் கேட்டார். அவருடைய எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும் என்றேன். உடனடியாக கலைஞரிடம் போனை கொடுத்து பேசச் சொன்னார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
‘கோபாலபுரம் வர முடியுமா?’ என்று கலைஞர் கேட்டார், உடனடியாக அங்கு சென்றேன். முதல்முறையாக அவரைச் சந்தித்தேன். ‘பாட்ஷா’ படத்தைப் பார்த்து ரசித்தேன் என்றார். படத்தின் ஸ்கிரீன் பிளே, ரஜினிகாந்தின் ஆக்டிங் போன்றவற்றைப் பற்றி பேசினார். அடுத்த ஆறு மாதங்கள் அவருடன் பயணிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இயக்குநர்களுக்கு வேண்டிய மரியாதையைக் கொடுப்பவர் கலைஞர் கருணாநிதி. ‘சங்கமம்’ படத்தைப் பார்த்துவிட்டு, மு.க.ஸ்டாலின் என்னை வெகுவாகப் பாராட்டினார்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி திடீரென என்னைத் தொடர்புகொண்டு, பாபாவைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார். அந்தப் படம், ‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’ போல இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ‘அனந்தா’ படத்திற்கு தனி எனர்ஜி உள்ளது. இந்தப் படத்தில் அனைவருக்கும் ஒரு அதிசயம் நடந்தது. லாபத்திற்காக இல்லாமல், பாபா மீதுள்ள அன்பினால் இந்தப் படத்தை எடுத்துள்ளார் தயாரிப்பாளர் கிரிஷ்” என்றார்.

