மஞ்ஞும்மல் பாய்ஸ் திரைப்படம் மூலம் சர்வதேச அளவில் பிரபலமான ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே ஒரு இளம் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வேடனை தேடி வரும் நிலையில், இந்த புதிய புகார்கள் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நேரடியாக இந்த இரண்டு புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன. முதல்வர் அலுவலகம் இந்தப் புகார்களை மாநில காவல்துறைக்கு அனுப்பி வைத்துள்ளது. விரைவில் இதுதொடர்பான விசாரணையும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த வேடன்?
கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாக கொண்டவர் வேடன். இவரது தாயார் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தமிழ் மற்றும் மலையாள மொழிகளை இணைத்து இவர் பாடும் ராப் பாடல்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக பார்க்கப்படுகின்றன. 2020-ம் ஆண்டு இவர் வெளியிட்ட ‘வாய்ஸ் ஆப் தி வாய்ஸ்லெஸ்’ (Voice of the Voiceless) ஆல்பம், பரவலான கவனத்தைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, மலையாளத் திரையுலகில் பாடலாசிரியர் மற்றும் பாடகராக அறிமுகமானார். சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இவரை உலகெங்கும் கொண்டு சேர்த்தன. இவரது பாடல்கள் சமூக வலைத்தளங்களிலும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களிலும் ட்ரெண்டாகி, இளைஞர்கள் மத்தியில் இவரை மேலும் பிரபலமாக்கின. தற்போது, இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமாக உள்ளார்.
தொடர் பாலியல் புகார்கள்
கடந்த மாதம், ஒரு இளம் மருத்துவர் வேடன் மீது பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்திருந்தார். அதில், 2021 முதல் 2023 வரை தன்னுடனும், வேடனுடனும் நட்பில் இருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பலமுறை பாலியல் உறவு கொண்டதாகவும் குற்றம் சாட்டிருந்தார். இதன் அடிப்படையில், எர்ணாகுளம் அருகேயுள்ள தீர்க்ககரா காவல்துறையினர், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, வேடன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது இரண்டு பி.ஹெச்டி படிக்கும் பெண்கள் புதிய புகார்களை அளித்துள்ளனர். முதல் பெண் தனது புகாரில், 2020-ம் ஆண்டு பழங்குடி மக்கள் தொடர்பாக வேடனிடம் உதவி கேட்டபோது, தனக்கு அறிமுகமானதாகவும், முதல் சந்திப்பிலேயே எர்ணாகுளம் குடியிருப்பில் வைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய அவர் முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார். மற்றொரு பெண், தான் ஒரு இசைக்கலைஞர் என்றும், தன்னை தேடி வந்து நட்பு ஏற்படுத்திய வேடன், 2021-ம் ஆண்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகாரில் கூறியுள்ளார். இந்த தொடர் புகார்கள், சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக் குரலாக கொண்டாடப்பட்ட ஒரு கலைஞர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.