காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில், பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மனால் (இராஜசிம்மன்) கி.பி. 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மணற்கற்களால் முழுமையாகக் கட்டப்பட்ட தென்னிந்தியாவின் பழமையான கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
இக்கோயில் இராஜசிம்மேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. பிற்காலச் சோழர், விஜயநகர மன்னர்கள் காலத்தில் இக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இக்கோயிலின் சிற்பங்கள், மாமல்லபுரம் சிற்பங்களுக்குப் பிறகு பல்லவ கலையின் உச்சநிலையை வெளிப்படுத்துகின்றன. இந்தியாவின் தொல்பொருள் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் இக்கோயில், சுற்றுலாப் பயணிகளையும் பக்தர்களையும் ஈர்க்கும் ஒரு முக்கியத் தலமாக விளங்குகிறது.
காஞ்சி கைலாசநாதர் கோயில் சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டது. இங்கு மூலவர் கைலாசநாதர், 16 பட்டைகளைக் கொண்ட பெரிய சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். கோயிலைச் சுற்றியுள்ள உட்பிரகாரத்தில் 58 சிற்றாலயங்கள் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றிலும் சிவபெருமானின் பல்வேறு வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய சுற்றுப்பாதையில் வலம் வந்தால் மறுபிறவி இல்லை என்பது ஐதீகம்.
வழி விவரம்
விமானம்: சென்னை பன்னாட்டு விமான நிலையம் சுமார் 65 கி.மீ
இரயில் காஞ்சிபுரம் ரயில் நிலையம்: கோயிலிலிருந்து சுமார் 3 கி.மீ
பேருந்து: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் கோயிலிலிருந்து சுமார் 2 கி.மீ
உள்ளூர் போக்குவரத்து: ஆட்டோ ரிக்ஷா மற்றும் வாடகை வண்டிகள் மூலம் எளிதில் கோயிலை அடையலாம்.