தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் ரூ.30.5 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவையும், சேலம் மாவட்டம் கருப்பூர் கிராமத்தில் ரூ.29.5 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
இந்நிலையில் இதுகுறித்து தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை சேலம் மற்றும் தஞ்சாவூரில் கொண்டு வரும்பொருட்டு, இந்நகரங்களில் மினி டைடல் பூங்காக்களை இன்று திறந்து வைக்கிறோம். டெல்டாவின் ஒரு எம்எல்ஏ என்ற முறையில் இந்த முயற்சிக்கு நன்றியுள்ளனவாக இருப்பேன்.
முதலமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையால், இந்தத் திட்டத்தை வெறும் 15 மாதங்களில் முடிக்க முடிந்தது. விரைவில் இரண்டாம் கட்டத்தை நோக்கி செல்லலாம். இதற்கான திட்டங்கள் முதலமைச்சரின் ஒப்புதலுக்கான நிலுவையில் உள்ளது.
சேலம் போன்ற 2-ம் நிலை நகரங்களுக்கு, அதிக தகவல் தொழில்நுட்பத் துறையின் உள்கட்டமைப்பைக் கொண்டு வரவேண்டும் என்ற முதலமைச்சரின் தொலைநோக்கு பார்வையால், தற்போது இந்த #SalemTidelNeo விரைவாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் டெக்ஸ் பார்க் வருவதால், சேலம் ஜவுளித் துறையிலும் பெரிய ஊக்கத்தைப் பெறும்.
வளர்ந்து வரும் நகரங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான எங்கள் முன்னெடுப்புகளில் ஒன்றே இந்த மினி டைடல் பூங்காங்க்கள். இதன்மூலம் திறமைமிக்க இளைஞர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்புகளை பெறலாம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் TrillionDollarTN என்ற கனவை எட்டுவதற்கான பாதையில் பயணித்து வருகிறோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.