பாஜகவின் மீது அச்சம் கொண்டிருக்கும் அதிமுக அதன் நடவடிக்கையை கண்டிக்காமல் எடப்பாடி பழனிசாமி போகிற போக்கில் காங்கிரஸ் ஆட்சியின் மீது வீண்பழி சுமத்துகிறார் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டில் சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை கடந்த 8 ஆண்டுகளில் புயல், மழை என்று பல்வேறு இயற்கை பேரிடர்கள் வந்து போய் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு இயற்கை பேரிடர்களிலும் பல்வேறு உயிர் இழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இவற்றையெல்லாம் ஒன்றிய பாஜக அரசு கண்டு கொள்ளவில்லை. அந்த அளவிற்கு ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டின் மீது பாராமுகமாகவே நடந்து கொள்கிறது.
சென்னையில் 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் தொடங்கி 2022-ல் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் வரை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கேட்ட நிவாரண நிதியில் கொடுத்தது வெறும் 4.61 சதவிகிதம் மட்டுமே. கடந்த 8 ஆண்டுகளில் இயற்கை போரிடரின் போது சீரமைப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்திற்காக தமிழ்நாடு அரசு கேட்டது 1,27,655.80 கோடி ஆனால் கிடைத்தது வெறும் ரூ.5884.49 கோடி மட்டுமே, ஆனால், ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி வரி வருவாய் மட்டும் 10 ஆயிரம் கோடிக்கு மேல் ஒன்றிய அரசால் வசூலிக்கப்படுகிறது.
எந்த கட்சி ஆட்சி செய்தாலும் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக் குழுவில் கூறியுள்ளார். அதற்கு எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் தமிழ்நாட்டில் பல சிறப்பு வாய்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை எடப்பாடி பழனிசாமி அவர்களால் மறுக்க முடியுமா? தமிழ்நாடு கேட்கும் நிவாரண தொகையை கொடுக்க வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி தீர்மானம் போட தைரியமில்லாத எடப்பாடி பழனிசாமி அவர்கள் போகிற போக்கில் காங்கிரஸ் அரசை குற்றம் சொல்வதற்கு என்ன அருகதை இருக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் 2015 அன்று சென்னையில் செயற்கையாக நடந்த பெருவெள்ளத்தின் போது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அரசு ரூபாய் 1 கோடி நிவாரண நிதியாக வழங்கியது. தற்போது கூட திமுகவின் அனைத்து கூட்டணி கட்சிகளும் இதர அமைப்புகளும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்றதை நிதி பங்களிப்பாக அளித்துள்ளார்கள். தமிழ்நாட்டின் மக்கள் மீது சிறிதும் அக்கறையில்லாத அதிமுக இதுவரை ஒரு ரூபாய் கூட நிதியாக வழங்கவில்லை.
காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசு பதவியில் இருக்கும்பொழுது தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்புகளை அப்போது இருந்த ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் உள்ளிட்ட பல ஒன்றிய அமைச்சர்கள் குழு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு தகுந்த நிவாரண தொகையை வழங்கினார்கள். பாஜகவின் மீது அச்சம் கொண்டிருக்கும் அதிமுக அதன் நடவடிக்கையை கண்டிக்காமல் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் போகிற போக்கில் காங்கிரஸ் ஆட்சியின் மீது வீண்பழி சுமத்துகிறார். தமிழ்நாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி தருவார்கள் என்பதில் ஐயமில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.