பரந்தூர் விமானநிலைய திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை: ஒன்றிய அரசு விளக்கம்

Priya
35 Views
1 Min Read

பரந்தூர் விமான நிலையம் வராது என தவெக அரசு தொடர்ந்து மக்களிடம் சொல்லி வரும் நிலையில், பரந்தூர் விமானநிலைய திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றோ கைவிட வேண்டும் என்றோ தமிழ்நாடு அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. திமுக எம்பி வில்சன் கேட்ட கேள்விகளுக்கு ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2-வது சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காக, தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்திற்கு (TIDCO) கடந்த ஏப்ரல் 7, 2025 அன்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கொள்கை ரீதியிலான அனுமதியை வழங்கியது

செப்டம்பர் 2024-இல் TIDCO சமர்ப்பித்த விண்ணப்பத்தின்படி, இந்த விமான நிலையத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்கான மதிப்பிடப்பட்ட செலவு சுமார் ரூ.10,500 கோடி ஆகும். இந்த விமான நிலையத் திட்டத்தை மாற்றுவது அல்லது செயல்படுத்துவது என்பது முழுக்க முழுக்க மாநில அரசின் முடிவைப் பொறுத்தது. நிலம் கையகப்படுத்துதல், திட்டத்திற்கான நிதி மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுவது போன்ற செயல்பாடுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது திட்டத்தை மேம்படுத்தும் நிறுவனத்தின் பொறுப்பாகும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தவெக அரசு இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும், மாற்று இடங்களை ஆராய்ந்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், ஒன்றிய அரசின் இந்த நாடாளுமன்ற விளக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply