தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (10.2.2025) சென்னை தலைமைச் செயலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் மதி அனுபவ அங்காடியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடையவேண்டும் என்பதற்காக 1989-ம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை தொடங்கி வைத்தார். மகளிரின் முன்னேற்றத்திற்காக, துவங்கப்பட்ட இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதின் காரணமாக பிற மாநிலங்களாலும் பின்பற்றப்பட்டு பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஒரு முன்னோடி திட்டமாக விளங்குகிறது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்திட்டங்களின் பயனாக இன்று சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில, மாவட்ட, வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகள், மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள், மதி அங்காடி, மதி இணையதளம், மதி சிறுதானிய உணவகம் மற்றும் இயற்கைச் சந்தைகள் என பல்வேறு செயல்பாடுகள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாக இன்று சுய உதவிக் குழுக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, “மதி அனுபவ அங்காடி” (MATHI Experience Store) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் 18.11.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்களின் தயாரிப்புப் பொருட்களை நியாயமான முறையில் விற்பனை செய்து, வருமானம் ஈட்டுவது மதி அனுபவ அங்காடியின் தனிச்சிறப்பு. இந்த மதி அனுபவ அங்காடியில் தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் செயல்படும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதி அனுபவ அங்காடிக்கு பொதுமக்கள் அளித்த வரவேற்பினைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இரண்டாவது மதி அனுபவ அங்காடியினை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (10.02.2025) துவக்கி வைத்தார்.

இந்த மதி அனுபவ அங்காடியில் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிரால் உற்பத்தி செய்யப்படும் “மதி” என்ற வணிக முத்திரையுடன் கைவினைப் பொருட்கள், கைத்தறி துணிகள், தேன், நாட்டுச்சர்க்கரை, சிறுதானிய உணவு பொருட்கள், அலங்கார பொருட்கள், ஆபரணங்கள், சிலைகள், உணவுப் பொருட்கள், சிறுதானியங்கள் மற்றும் வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் உள்பட அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஸ்ரேயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here