தமிழினத்தை அவமதித்த பிரதமர் மோடி தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
ஒடிசாவில் தமிழர்களை பிரதமர் மோடி விமர்சித்துள்ளதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை எனும் பெயரில் நாளொரு வெறுப்பும் பொழுதொரு விஷமும் விதைத்து வருகிறார். பத்தாண்டு ஆட்சியில் என்ன செய்தோம் என்பதைச் சொல்ல திராணியற்ற பிரதமர் போகிற போக்கில் வன்மத்தை விதைத்து வருகிறார்.

பூரி ஜெகநாதர் ஆலயத்தின் பொக்கிசச் சாவி தமிழ்நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது எனத் தன் தகுதிக்கும் குறைவான மலிவான அரசியல் பரப்புரையைச் செய்திருக்கிறார். கூட்டணியில் சேர்க்காத நவீன் பட்நாயக் மீது உள்ள கோபத்தையும் எரிச்சலையும் பட்நாயக்கின் அரசு நிர்வாகத்தைப் பரிபாலனம் செய்யும் தமிழரான ஐஏஎஸ் அதிகாரி வி கே பாண்டியன் மீது பாய்ந்திருக்கிறார்.

தமிழர்கள் மீது காலகாலமாக அவரும் அவரது கொள்கை சித்தாந்தத்தின் மீது நம்பிக்கைவைத்திருப்பவர்களும் கொண்டிருந்த வன்மம் இப்போது வெளிப்பட்டிருக்கிறது. தமிழர்கள் எங்கே இருந்தாலும் எந்தப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டாலும். அதனைச் செவ்வனே நிறைவேற்றித் தருவதில் உலகப் புகழ் பெற்றவர்கள். அதனை எங்கும் சொல்லி மார் தட்டாதவர்கள். பண்டைய காலம் தொடங்கி இன்றைய காலம் வரை உலகின் பலநாடுகளில் அமைச்சர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை தமிழர்கள் அமர்ந்து அந்நாட்டிற்கு அரும்பணியாற்றியிருக்கிறார்கள். தலைநகர் டெல்லி முதல் இந்தியாவின் பல மாநிலங்களில். தமிழர்களின் நிர்வாகப் பணி அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.

நாட்டை காட்டிக் கொடுப்பது. வளத்தைச் சுரண்டி விட்டு நாட்டை விட்டு ஓடுவது தமிழர்களின் மரபணுவில் எப்போதும் இருந்தது கிடையாது. தமிழர்களால் தாய் நாட்டிற்கும். இந்தப் பூமிப் பந்திற்கும். அளவற்ற நன்மைகள் விளைந்து கொண்டிருக்கிறது. உலகளாவிய பாரம்பரியமும். பண்பாட்டுச் செழுமையும் கொண்ட தமிழ்ச் சமூகத்தைக் கொச்சைப்படுத்தும் உரிமையை யார் பிரதமர் மோடிக்குத் தந்தது.? இந்திய அரசியல்சாசனத்தின் அடிப்படையில் பதவி ஏற்றுக் கொண்ட, அனைத்து மக்களுக்கும் பொதுவான பிரதமர் இவ்வாறு பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உலகில் வாழும் 11 கோடி தமிழர்களையும் மோடி அவமானப்படுத்தி இருக்கிறார். இதற்காகப் பிரதமர் மோடி தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம். மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியும் ஒரு தமிழர் தான். தேர்தலில் மோடி தோற்றால் அதற்கும் தமிழர்கள் மீது பழி சுமத்தினால் ஆச்சரியமில்லையென ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here