அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடி குற்றம் செய்ததாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 13-5-1996 முதல் 31-3-2002 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். மேலும் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு பதியப்பட்டு இருந்த நிலையில் 172 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி வேலூர் கோர்ட் நீதிபதி வசந்த லீலா பிறப்பித்த உத்தரவில், இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
ஆனால் இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் முறையாக கையாளவில்லை என்றும், மேல்முறையீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை என்று கருதிய நிலையில் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து மேல்முறையீட்டு வழக்கை எடுத்துக் கொண்டிருப்பது பொன்முடியை மட்டிமல்ல திமுக தரப்பை அதிர்ச்சியடைய வைத்தது.இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவு செய்த நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேறு அமர்விற்கு மாற்றப்பட்ட நிலையில் நீதிபதி ஜெயசந்திரன் இந்த வழக்கை விசாரித்தார்.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடி குற்றம் செய்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில் என்ன தண்டனை கொடுக்கப்படும் என்பதை சென்னை உயர் நீதிமன்றம் நாளை மறுநாள் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தண்டனையை பொறுத்து அமைச்சர் பொன்முடியின் பதவி மீது முடிவு எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் 2017 இவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை செய்த மேல்முறையீடு சரியானது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உண்மை என்றும் இது குறித்து கீழமை கோர்ட் பொன்முடியை குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்தது செல்லாது. இந்த வழக்கில் அவர் சொத்து சேர்த்தது உறுதியானதால் அவரை குற்றம் செய்தவராக தீர்ப்பு அளிக்கிறோம். நாளை மறுநாள் இதில் தண்டனை விவரங்கள் வழங்கப்படும் என்றுகூறப்பட்ட நிலையில் இந்த தண்டனையை பொறுத்து அமைச்சர் பொன்முடியின் பதவி மீது முடிவு எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது