சர்வதேச மகளிர் தினம் நாளை (மார்ச்.8) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பெண்களுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
உழைக்கும் பெண்களின் உரிமைகளை உறுதி செய்வதும், அனைத்துப் பணிகளிலும், அனைத்து நிலைகளிலும் பாலினச் சமத்துவத்தை உறுதி செய்வதும்தான் சர்வதேச மகளிர் நாள் கொண்டாட்டங்களுக்கு அர்த்தமாகும். ‘ஆணுக்கு இங்கு பெண் இளைத்தவறில்லை’ என்கிற வாக்கியத்தை நிரூபிக்கின்ற வகையில், அவ்வையார், காரைக்கால் அம்மையார், ‘கவிக்குயில்’ சரோஜினி நாயுடு, அன்னை தெரேசா, முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, இந்திராகாந்தி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஃபாத்திமா பீவி போன்ற எத்தனையோ பெரும் ஆளுமைகள் இன்னமும் இந்த சமூகத்திற்கு பெரும் ஊக்க சக்திகளாகவும், ஏனைய பெண்களுக்கு ஆகச்சிறந்த கிரியா ஊக்கிகளாகவும் இருந்து வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.அத்தகைய பெண் ஆளுமைகள் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும்கூட சிறந்த முன்மாதிரிகளாகவே விளங்கி இருக்கிறார்கள். 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி வாகைசூடி, 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் கட்சியே மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளுகின்ற கட்சியாக மாற்றியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்தச் சாதனையை எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதாதான் படைத்தார்.
பெண்மையைப் போற்றி வணங்கவும், பெண்கள் இன்றி இந்த உலகம் இல்லை என்பதை உணர்த்தவும், பெண்களின் தியாக வாழ்வுக்கு வணக்கம் செலுத்தவும், ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் நாள் “சர்வதேச மகளிர் தினமாக” கொண்டாடப்படுகிறது. பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் இந்த நாளில் பெண்கள் அனைவருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் ,ஒரு நூற்றாண்டுக்கு முன், பாரதி கண்ட புதுமைப் பெண்களின் வடிவமாக புரட்சித் தலைவி அம்மா திகழ்ந்ததையும், அவர்களைப் போல பல்வேறு பொதுத் தளங்களில்
இயங்கும் பெண்களையும் காணுகின்றபோது மனம் பேர் உவகை கொள்கிறது என்றும் பழனிசாமி
கூறி உள்ளார்.