உலக நாடுகள் மீது விதித்த வரிகளை ரத்து செய்த அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் வெட்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் ஆவேசம்!

Priya
8 Views
2 Min Read

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தனது இரண்டாம் முறையிலான பதவிக்காலத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் மீது விதித்த அதிரடி கூடுதல் இறக்குமதி வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று (பிப்ரவரி 20, 2026) ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சட்டப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான 9 பேர் கொண்ட அமர்வு, 6-3 என்ற கணக்கில் இந்தத் தீர்ப்பை வழங்கியது. 1977-ஆம் ஆண்டின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் (IEEPA) பயன்படுத்தி ட்ரம்ப் இந்த வரிகளை விதித்திருந்தார். ஆனால், “அமெரிக்க அரசியலமைப்பின்படி வரிகளை விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே (Congress) உண்டு; அதிபர் தனது வரம்பைத் மீறிச் செயல்பட்டுள்ளார்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்தத் தீர்ப்பால் ஆவேசமடைந்த அதிபர் Trump, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “இந்த நீதிபதிகளின் செயலால் நான் வெட்கப்படுகிறேன். நாட்டிற்கு எது நல்லது என்று செய்யும் தைரியம் அவர்களுக்கு இல்லை” என்று சாடினார். குறிப்பாக, தான் நியமித்த நீதிபதிகளான நீல் கோர்சச் மற்றும் ஏமி கோனி பாரெட் ஆகியோர் இந்தத் தீர்ப்பிற்கு ஆதரவாக (அதிபருக்கு எதிராக) வாக்களித்ததை அவர் “துரோகம்” என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும், தனது வர்த்தகக் கொள்கையில் பின்வாங்காத Trump, தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே “வர்த்தக விரிவாக்கச் சட்டத்தின்” கீழ் உலக நாடுகள் மீது புதிய 10% இறக்குமதி வரியை விதித்து உத்தரவிட்டார். இந்த வரி 150 நாட்கள் மட்டுமே அமலில் இருக்கும் என்றும், அதற்கு மேல் நீட்டிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியா மீதான தாக்கம்: முன்னதாக இந்தியப் பொருட்களுக்கு 50% வரை வரி விதிக்கப்பட்டு, பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பின் 18% ஆகக் குறைக்கப்பட்டிருந்தது. தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் அந்த 18% வரி ரத்தாகிறது. “இந்தியாதான் நமக்கு வரி செலுத்தும், அமெரிக்கா வரி செலுத்தாது” என்று தனது வழக்கமான பாணியில் Trump கூறியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் மீண்டும் தண்டனை வரிகள் விதிக்கப்படும் என்ற தனது மிரட்டலையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply