பொருளாதார மற்றும் வேலைவாய்ப்புத் தேடல்கள் காரணமாக உலகம் முழுவதும் குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்களின்படி, உலகெங்கிலும் சுமார் 3.43 கோடி இந்தியர்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள், மீதமுள்ளோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆவர்.
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் குறித்த விரிவான தரவுகள் வெளியாகி சர்வதேச நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கனடா போன்ற நாடுகள் இந்தியர்களின் முதல் தேர்வாக உள்ளன. உலகளாவிய புலம்பெயர்வு பற்றிய இந்தத் தரவுகள், இந்தியப் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் இவர்களின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டுகின்றன.
அதிக இந்தியர்கள் வசிக்கும் டாப் 10 நாடுகள்
உலகளவில் அதிக இந்தியர்கள் வசிக்கும் டாப் 10 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு சுமார் 56.9 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 38.9 லட்சம் பேரும், கனடாவில் 36.1 லட்சம் பேரும் வசிக்கின்றனர்.
இந்த பட்டியலில் உள்ள மற்ற முக்கிய நாடுகள்:
- மலேசியா – 29.3 லட்சம்
- சவுதி அரேபியா – 27.5 லட்சம்
- இலங்கை – 16.1 லட்சம்
- தென் ஆப்பிரிக்கா – 13.9 லட்சம்
- பிரிட்டன் – 13.4 லட்சம்
- குவைத் – 10.1 லட்சம்
- சிங்கப்பூர் – 4.6 லட்சம்
இந்தத் தரவுகளின்படி, மேற்கத்திய நாடான அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் குடியேறியுள்ளனர். கனடா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளும் இந்தப் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளன.
வளைகுடா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிலை
வளைகுடா நாடுகளில் (ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத்) வசிக்கும் புலம்பெயர் இந்தியர்களின் எண்ணிக்கை மொத்தமாக 76.5 லட்சம். இது கிட்டத்தட்ட முக்கால் கோடி இந்தியர்கள் ஆவர். அதே நேரத்தில், மேற்கத்திய நாடுகளில் (கனடா, அமெரிக்கா, பிரிட்டன்) வசிக்கும் பூர்வீக இந்தியர்களின் எண்ணிக்கை 66 லட்சம் ஆகும். உலகளவில் புலம்பெயர்ந்த பூர்வீக இந்தியர்களின் மொத்த எண்ணிக்கையில் 40% பேர் இந்த மூன்று நாடுகளில் வசிக்கின்றனர்.
இந்த நாடுகளைத் தவிர, டிரினிடாட் மற்றும் டொபாகோவில் 5.4 லட்சம் பேரும், கயானாவில் 3.2 லட்சம் பேரும் இந்தியர்கள் வசிக்கின்றனர். லண்டன், சிட்னி, கோலாலம்பூர், ஜோகன்னஸ்பர்க், பெர்லின், பீஜிங், டோக்கியோ போன்ற உலகின் முக்கிய நகரங்களில் இந்திய கலாசாரத்தை ஊக்குவிக்க 38 இந்திய கலாசார உறவுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொருளாதார பங்களிப்பு மற்றும் புதிய ஒப்பந்தங்கள்
2024-25 நிதியாண்டில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் வருவாயில் 135.46 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 14% அதிகம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது புலம்பெயர்ந்த இந்தியர்களின் பொருளாதார வலிமையையும், நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் அளிக்கும் பங்களிப்பையும் காட்டுகிறது.
வெளிநாடுகளில் இந்தியர்களின் வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் வகையில், வெளியுறவு அமைச்சகம் பல்வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இருப்பினும், அதிக புலம்பெயர்ந்த இந்தியர்கள் வசிக்கும் ரஷ்யாவில் மட்டும் இதுவரை கலாசார உறவுக்குழுக்கள் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.