தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்துள்ளது. இதன் காரணமாக, சென்னையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு லேசான மழை பெய்தது. இதனை தொடர்ந்து புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. இந்த சூழலில், வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் நாளை (டிச.19) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் அனைத்து நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதே போல் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதி மீனவர்களும் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here