இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!
எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின்கீழ் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஒரு நாளுக்கு 20 ரூபாய் வீதம், மாதத்திற்கு 600 ஆக கூடுதல் பொறுப்புப் படி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சத்துணவு அமைப்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட சத்துணவு மையங்களை கூடுதலாக கவனித்து வந்தாலும், ஒரு மையத்திற்கு உண்டான கூடுதல் பொறுப்புப்படி மட்டுமே வழங்கப்படும். ஒரு வாரத்திற்கு மேல் கூடுதல் பணிபுரிந்தால் மட்டும் கூடுதல் பொறுப்புப்படி வழங்கப்படும். இந்நிலையில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சத்துணவு அமைப்பளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப்படி, ஒரு நாளுக்கு 33 ரூபாய் வீதம், 1000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 6.68 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.