அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு நியமனத் தேர்விலிருந்து விலக்கு, TNPSC மூலம் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புத் தேர்வு, ஊக்கத் தொகையை ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல், காவல்துறை மூலம் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வது தமிழக அரசின் அதிகாரப்போக்கையை வெளிப்படுத்துகிறது.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தங்களின் போராட்டங்களுக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தங்களை சந்திக்க கூட மறுப்பது ஏன் ? என பார்வை மாற்றுத்திறனாளிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகள உடனடியாக நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here