பழுதடைந்த பேருந்துகளை பழுதுபார்த்தும் மக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களுக்கு சேவை செய்து சிறப்பாக செயல்பட்டு வந்த தமிழக போக்குவரத்துத் துறை, கடந்த மூன்று ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில் சீரழிந்து போயுள்ளது என பல்வேறு செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன. 30 ஆண்டுகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், மக்களின் சேவைத் துறையாக, லாப நஷ்ட கணக்கு பாராமல் போக்குவரத்துத் துறை செயல்பட்டது. தேவைப்படும்போதெல்லாம் பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு, புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொண்டனர். திமுக ஆட்சி ஏற்பட்ட இந்த 36 மாத காலத்தில், அவ்வப்போது புதிய பேருந்துகள் வாங்கப்படுவதாகவும், இ-பேருந்துகள் வாங்க உள்ளதாகவும் விடியா திமுக அரசின் அமைச்சர் அறிக்கை வெளியிடுகிறாரே தவிர, புதிய பேருந்துகள் வாங்கியதாகத் தெரியவில்லை.

டயர் மற்றும் உதிரி பாகங்களை முறையாக கொள்முதல் செய்யாமல், பேருந்துகள் பழுது நீக்கப்படாமல், ஓட்டை-உடைசல் பஸ்கள் இயக்கப்பட்டு, இந்த திராவக மாடல் அரசு மக்களின் உயிரோடு விளையாடி வருகிறது. பஸ்களின் படிக்கட்டுகள் உடைந்து ரோட்டில் விழுகிறது. பேருந்துகளின் வீல்கள் தனியாக கழன்று ஓடுகின்றன. நடத்துனர் தன் இருக்கையோடு ஓடும் பஸ்சில் இருந்து சாலையில் விழுகிறார். பல பஸ்களில் இருக்கைகள் இருக்க வேண்டிய இடங்களில் பழைய டயர்களை போட்டு வைக்கிறார்கள்.

உடனடியாக பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக இயக்க வேண்டும். நிதிப் பற்றாக்குறை என்ற பல்லவியை திரும்பத் திரும்ப பாடாமல் கடன் வாங்கிய 3½ லட்சம் கோடியில், புதிய பேருந்துகளை வாங்குவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்திட வலியுறுத்துகிறேன். ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். அவர்களின் உயிரோடு விளையாடாமல், அவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் புதிய பேருந்துகளை வாங்கவும், பழைய பேருந்துகளை முறையே பழுதுபார்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here