சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் வகையில் 70 நாட்களும் வேறுபாடுகளை மறந்து பணியாற்றும்படி மாவட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் பணி ஒருங்கிணைப் புக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். திமுக சார்பில் நடந்துவந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டுக்கு, தேர்தல் அறிக்கை தயாரிக்க, கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில்,கட்சிப்பணிகளை ஒருங்கிணைப்பதற்கான அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலான குழுவில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் கடந்த ஜன.22-ம் தேதி கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது, ஜன.21-ம் தேதி சேலத்தில் நடைபெற்ற மாநில இளைஞரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியபடி, நாடாளுமன்ற தொகுதி வாரியாக மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர், மண்டல குழு தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்து அவர்களின் கருத்துகளை கேட்கவும், தேர்தல் பணிகள் குறித்துஆலோசனை நடத்தவும் முடிவெடுத்தனர். இதையடுத்து, கடந்த ஜன.24-ம்தேதி முதல்அண்ணா அறிவாலயத் தில் தொடங்கிய ஆலோசனைக்கூட்டம் நேற்று நிறைவுற்றது.

நேற்று வரையிலான கூட்டத்தில் 3,405 நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பெண்கள் 617 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில், 4 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் களநிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணிகள் குறித்து அமைச்சர் உதயநிதி தலைமையிலானகுழுவினர் ஆலாசனை நடத்தினர்.

அப்போது, கரூர் தொகுதியின் தற்போதைய எம்பியான காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணிக்கு எதிராக திமுக நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். திண்டுக்கல், காஞ்சிபுரம் தொகுதிகளை பொறுத்தவரை நிர்வாகிகளுக்குள் உள்ள சிக்கல்கள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அப்போதுகுழுவினர், கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் வரும் 70 நாட்களுக்கு இணைந்து பணியாற்றும்படி கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், நேற்று அமைச்சர் உதயநிதி தனது சமூக வலைதளப்பக்கத்தில்,‘‘வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து இண்டியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும்வகையில் தேர்தல் பணியாற்றும்படி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டோம்’’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here