இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே நமது திமுக அரசின் அமைச்சர்களிடம் அவரவர் துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டும், அவரவர் மாவட்டங்களில் உள்ள பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டும் அறிக்கை தயாரித்து வைக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
அதுபோலவே, அமைச்சர்கள் பலரும் அறிக்கைகளை அளித்திருந்தனர். அதனை நானும் துணை முதலமைச்சரும், மூத்த அமைச்சர்களும் பார்வையிட்டு, பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் முடங்கிப் போயிருந்த தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பினை மேம்படுத்த மாவட்டவாரியான ஆய்வுகளுக்குத் திட்டமிட்ட நிலையில், பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் தொடக்கத்திலேயே சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமாகப் பெய்த நிலையில், முதல்வரான உங்களில் ஒருவனான நானும், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும் நாடாளுமன்ற – சட்டப்பேரவை உறுப்பினர்களும், மேயர் – தலைவர் – உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அரசு நிர்வாகத்தினரும் இரவு பகல் பாராமல் களத்தில் நின்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பணியாற்றியதை ஊடகங்களும், திமுக அரசின் பணியை நேரில் பார்த்த பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.
இதனைப் பொறுக்க முடியாமலும், தாங்கள் அரசியல் செய்வதற்கு எதுவும் கிடைக்காததாலும் எதிர்வரிசையிலே இருப்பவர்கள், அதிலும் தங்களுடைய பத்தாண்டுகால மோசமான ஆட்சிக் காலத்தில், கடைசி நான்கு ஆண்டுகளில் படுமோசமான நிர்வாகம் நடத்தியவர்கள், மக்கள் மீதான அக்கறையுடன் செயல்படும் திமுக அரசு மீது அடிப்படையில்லாத அவதூறுகளைப் பரப்ப முனைந்து, அதிலும் முனை முறிந்து போயிருக்கிறார்கள்.
பொதுவாழ்வில் விமர்சனங்கள் சர்வசாதாரணம்தான் என்பதால் எதிர்த்தரப்பின் ஆதாரமற்ற விமர்சனங்களைக் கடந்து, திராவிட மாடல் அரசு தனது மக்கள் நலப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அக்டோபர் 22-ம் தேதியன்று நாமக்கல் மாவட்டத்தில் ரூ.19.50 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்து பார்வையிட்டதுடன், பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெற்ற விழாவில் 16 ஆயிரத்து 31 பயனாளிகளுக்கு ரூ.146 கோடியே 56 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினேன்.
சொன்னதைச் செய்வோம் என்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நெறியிலும், சொல்லாமலும் செய்வோம் என்ற முறையிலும், நாமக்கல்லில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியினை வழங்கி, திட்டங்கள் செயல்படுத்தும் முறையைக் கண்காணிப்பதற்காக நவம்பர் மாதம் முதல் மாவட்டந்தோறும் நேரில் கள ஆய்வு செய்யவிருக்கிறேன் என்பதையும் தெரிவித்தேன்.
விழாவில் திரண்டிருந்த மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் நேரலையில் நிகழ்வைப் பார்த்த பொதுமக்களும் இந்த அறிவிப்புக்குப் பெரும் வரவேற்பை அளித்துள்ளனர். திமுக அரசு தனது திட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுடன் உள்ள தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், பண்டிகை நாள்கள் முடிவடைந்த பிறகு, நவம்பர் 5, 6 தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வினைத் தொடங்க இருக்கிறேன். மற்ற மாவட்டங்களிலும் தொடரவிருக்கிறேன். கள ஆய்வும் தொடரும், திமுக அரசின் சாதனைத் திட்டங்களும் தொடரும்!
அரசு சார்ந்த பணிகளை மட்டும்தான் கவனிப்பீர்களா என்று உடன்பிறப்புகளான உங்களின் மனக்குரலை உங்களில் ஒருவனான நான் அறிவேன். கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கழகப் பணிகளையும் ஆய்வு செய்வேன். கண்மணிகளாம் உடன்பிறப்புகளையும் நேரில் கண்டு நெஞ்சம் மகிழ்வேன்”
இவ்வாறு அந்த கடித்ததில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.