கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார். இந்த வருடமும் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக அவர் பரிசுகளை வழங்குகிறார்.

முதற்கட்டமாக, இன்று திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்கி வருகிறார். இந்த நிகழ்வில், 750 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட 3,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய்க்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை!

ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது;

‘பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை – பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ – மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here