வட மாநிலங்களில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம், புதுச்சேரியின் 40தொகுதிகளிலும் திமுக உள்ளிட்டஇண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதேபோல, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர்ராகுல் காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், கடந்த சிலநாட்களாக சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர்.
அப்போது, வடமாநிலங்களில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததாகவும், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் அவரது பிரச்சார பயண விவரம் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்இதுவரை வெளியாகவில்லை.