தென்னிந்திய திரை எழுத்தாளர்கள் சங்கம், ஐபி கிளைம்ப் உடன் இணைந்து ஸ்வான் அகாடமியை சென்னையில் தொடங்கியுள்ளது. வளர்ந்து வரும் கதைசொல்லிகள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு முறையான பயிற்சியும் வழிகாட்டுதலும் வழங்கும் வகையில் இந்த அகாடமி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சேரன், பட்டுக்கோட்டை பிரபாகர், ஆர்.சுந்தர்ராஜன், சமுத்திரக்கனி, சினேகன் உள்ளிட்டோர் தலைமையில் செயல்படும் இந்த அமைப்பின் தொடக்க விழாவை முன்னிட்டு, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் திரை எழுத்தாளர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ், தனது எழுத்துப் பயண அனுபவங்களையும், திரைக்கதை உருவாக்கம் தொடர்பான கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். புதிதாகத் தொடங்கப்பட்ட இந்த அகாடமியின் லோகோ மற்றும் பாடத்திட்டத்தையும் அவர் வெளியிட்டார்.
ஐபி கிளைம்ப் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜி.கே.திருநாவுக்கரசு, லோகேஷ் கனகராஜ் பங்கேற்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நவீன கதை சொல்லல் குறித்த விரிவான புரிதலை வழங்கும் வகையில் பல்வேறு சிறப்பு அமர்வுகளும் நடைபெற்றன. பாடலாசிரியர் மதன் கார்க்கி, இயக்குநர் லீனா மணிமேகலை, மலையாள எழுத்தாளர், இயக்குநர் அனுராஜ் மனோகர், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.

