இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி, இளம் நடிகர் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு திரைத்துறையினர்,மற்றும் முக்கிய பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,” மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்!
தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர்
மாரி செல்வராஜ்.
அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு ‘sharp message’-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை. அவ்வகையில் விளையாட்டுத் துறையை மையமாக வைத்து, இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ் அவர்கள்.
சகோதரர் மாரியின் திரைமொழியும், கலைநேர்த்தியும், மேலும் மேலும் மேம்பட்டு வருவதற்கு எடுத்துக்காட்டாக ‘பைசன்’ மிளிர்கிறது. இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, மாரியின் திரைக்கதைக்கு உயிரூட்டியுள்ள துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிஷா உள்ளிட்ட நடிகர்கள், பின்னணியில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
இதுபோல மேலும் பல படைப்புகளைத் தமிழ்த் திரையுலகுக்கு வழங்க மாரி செல்வராஜ் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார்.

