“உழைப்பும் குடும்பமும்தான் என் வெற்றிக்கு காரணம்” – தயாரிப்பாளர் கண்ணன் ரவி

Priya
16 Views
4 Min Read

கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிப்பில், ஜீவா நடிப்பில், நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தின் வெற்றி விழா, சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த முன்னணி நட்சத்திர நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசுகையில், ”எனக்கு ஏழு வயதாக இருக்கும்போதே தந்தையை இழந்தேன். பிறக்கும்போதே பணக்காரனாகப் பிறந்து, பிறகு ஏழையாகி, பிறகு மீண்டும் மீண்டும் ஏழையாகி, அதன்பிறகு பணக்காரனாகி இருக்கிறேன். இந்த வெற்றிக்கு எத்தனை முறை கேட்டாலும் இதைத்தான் சொல்வேன், உழைப்பு… உழைப்பு… குடும்பம்.‌

சிறிய வயதிலிருந்து, நானும் நன்றாக இருக்க வேண்டும்; என்னைச் சார்ந்தவர்களும் என்னைவிட நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவன்.‌ அதேபோல், தற்போது நான் இருக்கும் துபாயில் நல்ல பெயரை சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால்தான் என்னுடைய எல்லா செயல்பாடுகளும் துபாயில்தான் உள்ளது. ஏனெனில், நான் இருந்த இடத்திற்கு, வளர்ந்த இடத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்த நிகழ்வு, இந்தியாவில் இன்று, இந்தத் தேதியில் நடப்பதற்கு என் ஊர் மக்கள்தான் காரணம். அத்துடன், நடிகர் ஜீவாவும் சென்னைக்கு வரவேண்டும் என்று பலமுறை கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு முறையும் மறுத்து வந்த நான், இந்த முறை ஆச்சரியப்படுத்தும் வகையில் அவரை நேரில் சந்தித்தேன்.

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நான் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளேன். இந்த வருகையில் மகிழ்ச்சியை அள்ளித் தந்தது, இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும்தான். ஜீவா, முதலில் எங்களுடைய குடும்ப நண்பராகத்தான் பழகத் தொடங்கினார்.

இது, ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றி விழா என்பதைவிட, எங்களுடைய கண்ணன் ரவி குழுமத்தின் முத்திரையைப் பிரபலமாக்கிய வெற்றி விழாவாகப் பார்க்கிறேன். இதற்காக இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.‌

ஒருவர் வெற்றி பெறவேண்டும் என்றால், அவருடைய குடும்பம் நல்லவிதமாக அமைய வேண்டும். அது அமைந்தால், வெற்றி உறுதி.‌ அந்த வகையில், இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.

சினிமாஸ்கோப்பில் முதன் முதலாக வெளியான ‘ராஜராஜசோழன்’ எனும் படத்தைப் பார்த்துதான் சினிமா பிரமிப்பு என்னுள் ஏற்பட்டது. அதன்பிறகு நிறைய புத்தகங்களைப் படிப்பேன்; அறிவுபூர்வமாக பேசுபவர்களின் பேச்சைக் கேட்டு ரசிப்பேன். அண்மையில்கூட சீமானின் பேச்சை கேட்டு ரசித்தேன்.

தமிழில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களைப் பார்ப்பேன். இன்றும்கூட இரவு 12 மணியளவில் என்னுடைய வீட்டிற்குச் சென்றால், ஏதேனும் ஒரு மொழியில் ஒரு திரைப்படம் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும். அதனால்தான் இந்தக் கதையைத் தேர்வு செய்யும்போதும் கூட, முழுக்கதையையும் கேட்டோம்.

கதைசொல்ல வரும் இயக்குநர்களிடம், முழுக்கதையையும் சொல்லுமாறு கேட்டுக் கொள்வேன். ஏனென்றால், அந்தக் கதை எனக்குப் பிடித்திருந்தால்தான் மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்ற எண்ணம்.‌ கதை சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை என்றால், ‘இதைவிட சிறப்பான கதையைத் தயார் செய்துகொண்டு வாருங்கள் தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கும் எண்ணமும் திட்டமும் இருக்கிறது’ என்றுதான் நம்பிக்கையுடன் பதில் அளிப்பேன்.‌

இந்தக் கதையை கேட்ட உடனேயே பிடித்து விட்டது. யாரும் இதுவரை தொடாத சப்ஜெக்ட். அத்துடன், இந்தக் கதை மீது ஜீவாவிற்கும் நம்பிக்கை இருந்தது. அவருடைய கேரியரில் இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும் என்று நானும் நம்பினேன். இந்தப் படம் எனக்கு 80 சதவீதம்தான் திருப்தியைத் தந்தது. இதை நான் இயக்குநரிடமே தெரிவித்து விட்டேன். இன்னும் சிறிது காமெடி காட்சிகள் இருந்தால் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கும்.

இந்தப் படத்திற்கு குறுகிய நாட்களில் பிரமாண்டமாக விளம்பரப்படுத்தி, மக்களிடம் சென்றடையச் செய்தோம். ஏனெனில், இன்று நல்ல படங்கள் வெளியானால், அவை திரையரங்குகளில் மூன்று அல்லது நான்கு நாட்கள்தான் வெற்றிகரமாக ஓடுகிறது. ரசிகர்கள் அப்படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு திரையரங்கத்திற்கு செல்வதற்குள், அப்படத்தை திரையரங்கத்தில் இருந்து எடுத்து விடுகிறார்கள்.‌ இந்தப் படத்திற்கு ஒரே நாளில் அனைத்து வகையான விளம்பரங்களையும் செய்து, படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தோம்.

இனி என்னுடைய எல்லா திரைப்படங்களும் ஒரே நாளில் உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும். இது என்னுடைய திட்டங்களில் ஒன்று.‌ இந்த உலகத்தில் எந்தெந்த இடங்களில் தமிழர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் என்னுடைய படங்களை திரையிடுவேன்.

என்னுடைய குறிக்கோள் பணம் அல்ல. நல்ல படத்தை எங்களுடைய நிறுவனம் கொடுத்தது என்ற நற்பெயருக்காகத்தான் கடுமையாக உழைத்து வருகிறோம். ஒரே தருணத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களை உருவாக்கி வருவதால் வெற்றி – தோல்வி குறித்து கவலைப்படாமல் பணியாற்றி வருகிறோம்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply