பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் பிரபல தொழிலதிபர் காவ்யா கலாநிதி மாறன் ஆகியோரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கிரீஸ் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் டிவி நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநர்களுள் ஒருவரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் கிரிக்கெட் அணியின் இணை உரிமையாளர்களுள் ஒருவருமான காவ்யா கலாநிதி மாறன் ஆகியோரின் திருமணம் கிரீஸ் நாட்டில் இன்றும், நாளையும் (நவ.10, 11) நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோருடன் நேற்று அதிகாலை 3.50 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையிலிருந்து புறப்பட்டார். அவர்கள் துபாய் வழியாக கிரீஸ் நாட்டைச் சென்றடைகின்றனர்.
திருமண நிகழ்வுகளை முடித்துக்கொண்டு, நவ.13-ம் தேதி அதிகாலை துபாய் வழியாக மீண்டும் சென்னை திரும்புவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், இந்தத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த்தனது மகள் ஐஸ்வர்யா ரஜினி காந்துடன் சென்னையிலிருந்து கிரீஸ் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. கிரீஸில் நடைபெறும் திருமணத்தைத் தொடர்ந்து, வரும் நவ.21-ம் தேதி சென்னையில் நட்சத்திர விடுதி ஒன்றில் பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்தத் திருமணத்தின் மூலம் ஸ்டாலின் குடும்பமும், ரஜினிகாந்தின் குடும்பமும் உறவு முறையால் இணைகின்றன.
அதாவது மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் கலாநிதி மாறன். முரசொலி மாறன், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சகோதரி மகனாவார்.
அந்த வகையில், ஸ்டாலினும், கலாநிதி மாறனும் உறவினர்கள். இதனால் காவ்யா மாறன், ஸ்டாலினுக்கு பேத்தி முறையாகிறார்.
இதேபோல் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தின் சகோதரர் ரவிச்சந்தரின் மகன்தான் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்.
இவ்வாறு தமிழகத்தின் மிகவும் பரிச்சயமான மு.க.ஸ்டாலின், மாறன் மற்றும் ரஜினிகாந்த் குடும்பங்கள் இந்தத் திருமணத்தின் மூலம் இணைகின்றன.

